கோபாலபுரத்தில் இருந்தே பஸ் கிளம்புதா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி.. ஆனால் ஹைலைட்டே கடைசியில்தான்!
திமுகவை மீண்டும் விமர்சித்து அண்ணாமலை பேட்டி தந்துள்ளார்
சென்னை: மறுபடியும் திமுகவை சீண்டி பாஜகவின் அண்ணாமலை பேட்டி தந்துள்ளார்.. அத்துடன் உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக, ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது..
குறிப்பாக முக்கிய கட்டிடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி, அங்குள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றன..

ஸ்டாலின் கோரிக்கை
அந்த வகையில், தமிழக மாணவர்களை மீட்க, முதல்வர் ஸ்டாலினும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழக மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். ரஷ்யா வழியாக மாணவர்களை அழைத்து வர மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வர தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை
முதல்வர் இப்படி சொன்னதுமே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனே ஒரு அறிக்கையை வெளியிட்டார்.. மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை தான் மத்திய அரசு எடுத்து கொண்டிருக்கிறதே... இதுக்கு எதுக்கு ஒரு தூது குழுவை இங்கிருந்து அனுப்ப வேண்டும்? பாதுகாப்புத்துறை, வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா? உக்ரைன் போருடன் நீட் தேர்வை தொடர்புபடுத்தி மாணவர்களின் உயிருடன் விளையாட கூடாது" என்று காட்டமாக கேட்டிருந்தார்.

திமுகவுக்கு கேள்வி
இந்நிலையில், தமிழக மாணவர்களை அண்டை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக ரூ.14 லட்சம் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு செலுத்தியுள்ளது... இதற்கும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 56வது வார்டு பாஜக சார்பில் போட்டியிட்ட காடேஸ்வரா தங்கராஜ் வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மற்றும் வெற்றிக்கு உதவியவர்களுக்கு பாராட்டு விழா தாராபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அண்ணாமலை பேசியதாவது:

பாராட்டு விழா
"உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறது. வரும் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் வெற்றி பெற செய்வோம்.. உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்டு, வருவதிலும் திமுக பொய்யான அரசியல் செய்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முழுவீச்சில் மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி
உச்சக்கட்டமாக ரஷ்ய பிரதமருடன் பேசி 6 மணி நேரம் போரை நிறுத்தி இந்திய மாணவர்களை ரஷ்யா அழைத்து சென்று அங்கிருந்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார்.. ஆனால், கோபாலபுரத்தில் இருந்து பஸ்ஸை எடுத்து சென்று உக்ரைனில் இருந்து மாணவர்களை அழைத்து வந்தது போல் திமுக அரசியல் செய்து வருகிறது... இந்திய மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை" என்றார்.

பாஜக ஷாக்
அண்ணாமலையின் இந்த பேச்சைதான் சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.. உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்பு விஷயத்தில் திமுகவை இவர் தாக்கி பேசுவதும் குறை கூறுவதும் இயல்புதான்.. ஆனாலும், ரஷ்யா-உக்ரைன் போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தியதாக இன்னும் மோடியே சொல்லவில்லை.. போனில்தான் பேசினார்.. ஆனால், அண்ணாமலை சொல்லியிருப்பதை கேட்டால், டெல்லி பாஜகவே ஷாக் ஆகிவிடுமே" என்று கிண்டல் கலந்த தொனியில் சொல்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications