ஸ்டாலினின் கனவு திட்டம்.. அப்படியே உச்சி முகர்ந்து பாராட்டிய ராமதாஸ்.. அரசியலில் பெரிய ட்விஸ்ட்.. ஆ
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம் ஒன்றை பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென பாராட்டி உள்ளார். அவரின் பாராட்டு அரசியல் அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டம் ஆகும் இது. இதையடுத்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
விரிவுபடுத்தப்படுகிறது - வெளியான அறிவிப்பு: இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் விரிவுபடுத்தப்பட்ட இடங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
ஸ்டாலினின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
திட்டம் வெற்றி: கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். தேசிய அளவில் இந்த திட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவ, மாணவியர் வருகை பதிவேடு அதிகரித்து உள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் கீழ் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் 1,086 பள்ளிகளில் வருகை 20% வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40% அளவிற்கு வருகை பதிவுவேடு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒருநாளுக்கு செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 25ம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க ஒரு பள்ளி விடாமல் எல்லா பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எல்லா பள்ளி மாணவர்களும் இதனால் பயனடைய உள்ளனர்.
வரவேற்பு: இந்த நிலையில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் இதை பாராட்டி புகழ்ந்து உள்ளார். அதில், தமிழகத்தில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்; காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் யோசனை வரும் 25-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுக்கு பாராட்டுகள். காலை உணவில் முதல்கட்டமாக வாரத்திற்கு இரு நாட்களாவது சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும்; பின்னர் படிப்படியாக எல்லா நாட்களுக்கும் நீட்டிக்க வேண்டும்! #TNBreakfastScheme என்று கூறி உள்ளார்.
பாமக அதிமுக இடையே உறவு சரியாக இல்லை. நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லை, பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று பாமகவும் சொல்லி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென ஸ்டாலினை புகழ்ந்து பேசி பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications