திருமாவளவனின் தியேட்டர் பேச்சு! திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் உத்தேசம் கிடையாது! விசிக நிர்வாகி
சென்னை: தியேட்டர்கள் ஒருவர் கையில் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரும் உத்தேசம் கிடையாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் திரைமறைவில் நடந்து கொண்டுதான் வருகின்றன.
அது போல் சங்கேத மொழியிலும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. இதில் முக்கியமாக திமுக கூட்டணியில் பாமக இணைவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இடும்பன் பட விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , திரையரங்குகள் ஒருவரது பிடியில் இருக்கின்றன என தெரிவித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திமுக கூட்டணியில் பாமக வருவதால் அங்கிருந்து வெளியேற திருமாவளவன் இப்படியெல்லாம் பேசுகிறார் என பரவலாக பேசப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா. பாவலன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசுகையில் திரையரங்குகள் ஒருவர் பிடியில் இருப்பது குறித்து பேசியிருந்தார். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

சினிமா வட்டாரங்கள்
சினிமா வட்டாரங்களிலும் அரசு வட்டாரங்களிலும் உதயநிதியை மையப்படுத்தி திரையரங்குகள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பிடியில் இருப்பதாக பரவலாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு சன் டிவியின் ஆதிக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அது போல் அதிமுக ஆட்சியிலும் இது போன்றதொரு குற்றச்சாட்டு இருந்தது.

இசை வெளியீட்டு விழா
திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் திரையரங்குகள் குறித்த விஷயம் அங்கு வந்த பலரது கருத்தாக இருந்தது. இதை தொல் திருமாவளவனிடம் செவி வழிச் செய்தியாக யாராவது சொல்லியிருக்கலாம். அதன் அடிப்படையில் அவரும் ஒரு கருத்தை பதிவு செய்கிறார். ஆனால் இந்த கருத்து யாரையும் மையப்படுத்தியோ குறி வைத்தோ சொல்லப்பட்டதாக இல்லை. இன்று கோடிக்கணக்கில் முதலீடு செய்து வெளியிடும் படங்களுக்கு எளிதாக திரையரங்குகள் கிடைத்து விடுகின்றன.

குறைந்த செலவு
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளியிடுவதற்கு திரையரங்குகள் கிடைக்காமல் நிறைய படங்கள் வெளியிடுவதிலேயே சிக்கல் இருக்கிறது. ஒரு படத்தை எளிதாக எடுத்துவிடுகிறார்கள். ஆனால் அங்கு திரையிடுவதுதான் சிக்கலாக இருக்கிறது. குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் தயாாரிக்க ஒரு சிலர் தயக்கம் காட்டும் சூழல் நிலவுகிறது.

திருமாவளவன்
இதனால் யாரையும் மையப்படுத்தி விமர்சிக்காமல் இதை ஒரு அறிவுரையாக கூட திருமாவளவன் சொல்லியிருக்கலாம். இரும்பன் படத்தின் இயக்குநர் திருமாவளவனுக்கு நன்கு தெரிந்தவர். அவர் கூட திரையரங்குகள் கிடைக்காத விஷயத்தை அவரிடம் சொல்லியிருக்கலாம். திமுக கூட்டணியில் இருந்தாலும் குறைகளை இடித்துரைப்பது கூட்டணி கட்சிகளின் வேலை. அந்த அடிப்படையில் திருமாவளவன் அந்த கருத்தை பதிவு செய்திருக்கலாம்.

பாமக கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் கூட்டணியில் எங்கள் கட்சி இடம் பெறாது என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. திருமாவளவனும் பல இடங்களில் அதை சுட்டிக் காட்டியுள்ளார். அதே போல் பாஜக இடம் பெறும் கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்காது. ஆனால் பாஜக தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக பக்கம் வருவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அத்தகைய நகர்வை திமுக ஏற்றுக் கொள்ளாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக பாமக தன்னிச்சையாக எடுத்த முடிவாக இருக்கலாம்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி
திமுக கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகளில் வாக்காளர்களை அடிப்படையில் இரண்டாவது பெரிய கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. இதனால் திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருப்பதால் எங்களை பிரிப்பதற்கு பாமக செய்யும் ஒரு உத்தியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். கடந்த காலங்களில் திமுக- பாமக இடையே கூட்டணி ஏற்பட்டு அதனால் திமுக அடைந்த அவமானங்களை திமுக கண்டிப்பாக மறந்திருக்காது. பாமகவிடமும் இதுவரை ஒரு நம்பகத்தன்மை இருந்ததாக தெரியவில்லை. அதிமுகவோடு கூட்டணி வைத்தாலும் திமுகவோடு கூட்டணி வைத்தாலும் கூட்டணியின் தலைமைக்கு பாமக நம்பகமாக நடந்து கொண்டதில்லை.

தலைமைக்கு நெருக்கடி
தலைமைக்கு நெருக்கடி கொடுப்பது, ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று. திமுக கூட்டணி தற்போது உள்ளது போல் இதே நிலையில் நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைவார்கள். இந்த அணியை உடைக்க விசிகவை பிரிப்பதற்காக பாமக சதி செய்கிறது. இது பாமகவின் நாடக அரசியல். பாஜக மதவாத கட்சி, பாமக சாதிய கட்சி. மதவாதமும் சாதியவாதமும் ஒரே அளவுதான். திமுகவுக்கு பாமகவால் போடப்பட்ட சூட்டின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை. எனவே திமுக கூட்டணியில் பாமக இணையும் என்பது சாத்தியமற்றது. இவ்வாறு பாவலன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications