எடப்பாடிக்கு “செக்”.. மீண்டும் எம்ஜிஆர் “விதி” - சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டுவோம் என ஓபிஎஸ் சபதம்
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த விதியை சதியால் சுயநலவாதிகள் மாற்றிவிட்டதாகவும், ஜெயலலிதா வழியில் மக்களவைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற உறுதியேற்போம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இன்று ஜெயலலிதா நினைவு நாளை கடைபிடித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காலை 10:30 மணியளவில் தனது ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.
எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி மைத்ரேயன் மற்றும் தனது ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து அவருடன் சென்றனர்.
பெரியப்பா எம்ஜிஆர்..முதல் ஷோ பார்ப்பேன்..ஜானகி நூற்றாண்டு விழாவில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

சர்வாதிகார போக்கு
அவர்கள் உறுதிமொழியேற்றபோது பேசிய ஓ.பன்னீர்செல்வம், "தொண்டர்களே அதிமுக தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உருவாக்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதனை செயல்படுத்திக் காட்டினார். சதியை துணையாக கொண்டு இந்த விதியை மாற்றி சுயநலமாக மாற்றி இருக்கும் சர்வாதிகார போக்கினை கண்டிக்கிறோம்.

விதியை மீட்போம்
அத்துடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக தொண்டர்களால் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியையும் மீட்டு சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டுவோம் என சபதம் எடுக்கிறோம். "மக்கள் யாரிடமும் எதற்காகவும் கையேந்தாமல் இருக்க வாழ்நாளை அர்ப்பணித்த, மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற மொழியை வாழ்நாள் பிரகடனமாக்கிய ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைத்திடம் சபதம் எடுப்போம்.

திமுக அரசு
பெண்ணின் வளர்ச்சிதான் சமூகத்தின் வளர்ச்சி என்ற இலக்கோடு மிதிவண்டி, தாலிக்கு தங்கம், விலையிட்ட அரிசி, வேலைக்கு செல்லும் பணிகளுக்கு இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. ஆனால், திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவற்றை ரத்து செய்ததை கண்டிக்கிறோம்.

மக்களவைத் தேர்தல்
கருணை மிகுந்த ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம். மாநிலங்களுடைய வளர்ச்சிதான் தேசத்திற்கான வளர்ச்சி என்ற கொள்கையை கொண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிக உறுப்பினர்களை வெற்றிபெற செய்து தமிழ்நாட்டின் உரிமைகளை பெறுவதில் பெறும் வெற்றி கண்டவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா வழியில்
வரக்கூடிய தேர்தலில் ஜெயலலிதா வழியில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெற்றிட களப்பணியை தொடங்குவோம். ஆளுமை, மதிநுட்பம், சீரான திட்டங்களினால் அதிமுக தொண்டர்களை ஓரணியில் திரட்டி ஒற்றுமையை பறைசாற்றி பல வெற்றிபெற்றுத் தந்தார் ஜெயலலிதா. நாமும் அவர் வழியில் சென்று அதிமுகவை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல உறுதியேற்போம்." என்றார்.

உட்கட்சிப்பூசல்
ஒற்றைத் தலைமை பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இடையே ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே மாறி மாறி மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

மாறிய பகையும் நட்பும்
பன்னீரின் தர்ம யுத்தத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கு தற்போது முதன்மையாக எதிராளியாக இருப்பதே அவர்தான். அதேநேரம் அப்போது பகையாளிகளாக இருந்த ஓபிஎஸ், சசிகலா இடையே தற்போது இணக்கம் தெரிகிறது. டிடிவி தினகரன் அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கினாலும் சசிகலாவுடன் அவர் நெருக்கமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.