கதறும் மீனவர்கள்! அழகைவிட வாழ்வாதாரம் முக்கியம்.. லூப் சாலையில் நடப்பது என்ன? விவரித்த எழுத்தாளர்
சென்னை: மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்து இருக்கும் லூப் சாலையில் மீன்களை விற்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு நிலவும் சிக்கல்கள் என்ன? மீன் கடைகளால் உண்மையில் போக்குவரத்து பாதிக்கிறதா? என்ற கள நிலவரத்தை எழுதியுள்ளார் எழுத்தாளர் சரவணன் சந்திரன்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "கடந்த பதினைந்து வருடங்களாகச் சற்றேறக்குறைய நிதமுமே நான் பயணிக்கிற சாலை அது. கடலின் முகத்தில் விழிக்கவேண்டும் என்பதற்காகவே கலங்கரை விளக்கத்தில் இருந்து பட்டினப்பாக்கம் கடற்கரை ஊடாகச் சென்று எம்.ஆர்.சி நகர் வழியாக என்னுடைய கடைக்குச் செல்வேன். கடந்த இரண்டு நாட்களாக அந்தச் சாலைக்குள் நுழைய முடியவில்லை. ஏதோவொன்றை இழந்ததைப் போல உணர்ந்தேன்.

ஏனெனில் தினமுமே அந்தக் கடற்கரையில் நின்று அன்றைக்குக் கடல் என்ன தோற்றம் காட்டுகிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பேன். சிலநேரங்களில் கடல் ஒரு குளத்தைப் போல அமைதியாய்ப் படுத்துக் கிடக்கும். சிலநேரங்களில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். ஒருநாள் மெல்லூதா நிறத்தில் கிடக்கிற கடல், இன்னொரு நாள் கருமையாகத் தோற்றம் காட்டும். அப்போதுதான் கடலில் கழிவு நீர் கலந்து விட்டது என மேசைப் பத்திரிகையாளர்கள் எழுதுவார்கள்.
தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்வேன். இப்போது அதனியல்பில் இருந்த அச்சாலைக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சாலையின் இருபுறமும் இருக்கிற மீன் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து தமிழக அரசிற்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் நீதிமன்றம் உத்தரவு இட்டுவிட்டால் அதை அதிகாரிகளால், நீதிமன்ற அவமதிப்பு காரணமாக மீற முடியாது என்கிற களநிலவரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். நான் அந்த வழியாகப் பயணிக்கும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நிறைய மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன்.
கூர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், கடல் சில அடிகள் தூரத்திற்கு முன்னகர்ந்து வந்திருக்கிறது. முன்பெல்லாம் குடிசைகள் பல சாலையின் மேற்குப் புறமாக இருக்கும். சுனாமியின் போது கிழக்குப் புறம் இருந்த குடிசை வீடுகள் நீரில் மிதப்பதை நேரில் போய்ப் பார்த்தேன். இப்போது அரசு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை மேற்கே கட்டித் தந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அதிகம் போனால் அங்கே நூறு படகுகளுக்குக் குறைவாகவே இருக்கும்.
அந்தப் படகுகளாலும் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாது. இரண்டாயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு கொஞ்ச தூரம் போய் மீன் பிடித்து விட்டு வருவார்கள். படகில் போகிறவர்களுக்கு ஒருநாள் கூலி நிச்சயம். அதற்கு அதிகம் கிடைத்தால் கடல் மாதா தரும் அதிர்ஷ்டம்தான். அது எப்போதும் கிடைக்காதுதானே?
பெரும்பாலும் வலையில் சிறிய ரக மீன்களே கிடைக்கும். எப்போதாவது சீசனின் போதுமட்டும் கரைக்கு வரும் டைகர் இறால்கள் சிக்கும். பிடித்தவற்றை அந்தச் சாலையிலேயே போட்டு விற்பார்கள். சாலையின் மேற்குப் புறத்தில் குடிசைகள் போட்டுக் கடைகள் உண்டு. அவை அத்தனையும் மீனவர்களுடையவை என்று சொல்ல முடியாது.
மீனவர்கள் அல்லாதவர்களும் எங்களைப் போல சிந்தாதிரிப் பேட்டை, காசிமேடு போன்ற இடங்களில் மீன்களை வாங்கி வந்து அங்கே கடைபோடுவார்கள். கடல் பற்றி ஒன்றுமே அறியாத மக்கள் அது அந்தக் கடல் பகுதியில் பிடித்ததா என்று கேட்கையில் இவர்களும் ஆமாமாம் எனத் தலையாட்டிக் கொள்வார்கள். கடலில் பிடித்ததை அந்தக் கரையிலேயே வாங்குகிறேன் என மக்களும் புளகாங்கிதமடைவார்கள். அதைக் கெடுப்பானேன்?
ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற எந்த நாட்களிலும் கூட்டம் அவ்விடத்தில் இருக்கவே செய்யாது. அரசு விடுமுறை தினங்களில் வேண்டுமானால் ஞாயிற்றுக் கிழமை கூட்டத்தில் பாதி இருக்கலாம். அதுவும் ஒன்பது மணி துவங்கி பனிரெண்டு மணி வரை மட்டுமே அந்தக் கூட்டமும் இருக்கும். மாலை நேரத்தில் போய்ப் பார்த்தால் சாலையில், பேயாடிக் கொண்டிருக்கும், தூரத்தில் சில நாய்களாடிக் கொண்டிருக்கும், அதுதான் உண்மையான கள நிலவரம்.

சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நீளச் சாலையில் அதிகம் போனால் இருநூறு மீட்டர் தூரத்திற்கே இருபுறமும் மீன் கடைகள் இருக்கின்றன. இங்கே அதிகச் சிக்கலை ஏற்படுத்துவது, அங்கே திடீரெனப் பிறந்த மீன் உணவகங்கள்தான். அதுவும் யூ ட்யூப் யுகத்தில் சுந்தரி அக்கா கடை எனக் கொளுத்திப்போட்டு ஆரம்பித்த யுத்தம், இப்போது ஏகப்பட்ட அக்கா கடைகளாக முற்றி விட்டது.
வியாபாரத்தில் நம்மவர்களைப் போல எவராலும் போலச் செய்து போலிகளை உருவாக்க முடியாது. தலப்பாகட்டி என எவரோ ஆரம்பித்த ஹோட்டல் பெயரை ஊருக்கு ஊர் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிவீர்கள்தானே? அதே போலத்தான் இங்கும் சுந்தரி அக்கா போல, வசந்தா அக்கா கடை, சரசக்கா கடை என ஏகப்பட்ட போலச் செய்தல்கள்.
உண்மையைச் சொன்னால் இவர்கள்தான் அதிகமும் சாலையை ஆக்கிரமிப்பவர்கள். யூ ட்யூப் பார்த்த கூட்டம் காரில் இரவு நேரத்திலும் அங்கே கும்முகிறது. தரமுடைய மற்றும் தரமற்ற எல்லாமே அங்கு கிடைக்கும். நியாயமான விலையில் மற்றும் கொள்ளையடிக்கிற விலையில் என்கிற அம்சத்தில் அவை அடங்கும். இதைப் போலவான திருவிழாக் கடைகளுக்கே உரித்த ஏமாற்றுகளும் உண்டுதான்.அதை மறுக்கவே முடியாது.
இவர்கள் அனைவருமே மீனவர்கள் அல்ல என்கிற வாதத்தையும் உண்மையைப் பேசுகையில் மறுக்க முடியாது. இவர்கள்தான் இப்போதைய சிக்கலுக்குக் காரணம். மற்றபடி மீனவர்கள் சார்ந்த மீன் விற்பனையால் அந்தச் சாலையில் போக்குவரத்து முடங்குகிறது என்பதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சாலை என்பது ஒரு உபசாலைதான்.
கடற்கரைச் சாலையில் இருந்து சாந்தோம் வழியாகச் செல்ல இன்னொரு சாலை இருக்கத்தான் செய்கிறது. லூப் சாலை என்பது தேவையே இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்ட சாலை. உண்மையில் நிறையப் பேர் இந்தக் கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தும் பழக்கத்திலேயே இல்லை. நிறையப் பேருக்கு அப்படி ஒரு சாலை இருப்பது தெரியவும் செய்யாது. நடப்பவர்கள்கூட மெரினாவின் உட்புறச் சாலையைத்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்த லூப் சாலையில் தினமும் காலையில் ஒருசிலர் மட்டுமே நடை போவதைப் பார்க்கிறேன்.
எனவே பல ஆண்டுகளாக அங்குள்ள மீனவர்கள் அந்தச் சாலையைத்தான் தாங்கள் பிடிப்பதை விற்பதற்கான இடமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்போது திடீரென அதை அகற்றும் போது, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கத்தான் செய்யும் என்பதை உணர வேண்டும். இதில் இன்னொரு கோணமும் உண்டு. வெறுமனே இதை மீனவர்கள் மற்றும் விற்பனை என்கிற பணம்/தொழில் சார்ந்த எல்லைக்குள் மட்டுமே சுருக்கிப் புரிந்து கொள்ளவும்கூடாது.
ஒருவகையில் அங்கே மீன் வாங்க வருபவர்களுக்கு அதுவொரு அனுபவமாகவும் இருக்கிறது. குழந்தைகளோடு அவர்கள் மகிழ்ச்சியாய் அவ்விடத்தில் அந்த அனுபவத்தை அடைவதை நான் நெருக்கமாகப் பார்த்து இருக்கிறேன். அங்கே நேரில் போய் மீன் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள், எங்களுடையதை மாதிரியான கடைகளுக்கு வரவே மாட்டார்கள். போக்குவரத்து என்று சொல்லி இதுமாதிரியான மனிதர்களின் அனுபவத்திற்குத் தடைபோடுவது சரியல்ல என்பதே என் கருத்து.
ஒருசிலருக்காக ஏன் மக்கள் தங்கள் அனுபவத்தை இழக்க வேண்டும்?இறுதியாய்ச் சொல்வதற்கு ஒன்றுண்டு. மிக ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் இது. அதிக மக்கள் தொகை கொண்ட, அதிலும் பஞ்சப் பராரிகளை அதிகமாக உள்ளடக்கிய ஒருநாட்டில் வாழ்வாதாரத்திற்குத்தான் முதலிடம் தர வேண்டும். அழகுணர்ச்சிக்கு உண்மையில் ஆகக் கடைசியான இடம்தான். அதுதான் இயல்பான இயங்கியல் முறையும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications