"இதெல்லாம் தேவையா" பைக் சாகசம் செய்த யூ ட்யூப் பிரபலம்.. உயர்நீதிமன்றம் விதித்த நூதன நிபந்தனை!
சென்னை: சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட யூ ட்யூப் பிரபலம், நீதிமன்றத்தின் நிபந்தனைபடி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் அண்மைக் காலமாக நள்ளிரவில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கடந்த செப்.9ம் தேதி இரவில் தேனாம்பேட்டையில் தொடங்கி அண்ணா மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனத்தில் அபாயகரமாக சாகசம் செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பின்னர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய அந்த நபர்கள் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் பைக் சாகசம்
இதனைத்தொடர்ந்து அண்ணா சாலை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இருசக்கர வாகன பதிவு எண்ணை கண்டறிந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ் மற்றும் முகமது சைபான் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

யூட்யூப் பிரபலம்
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பைக் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பிரபலமான யூ ட்யூபரான ஹைதராபாத்தை சேர்ந்த பினோய் என்பவர் சென்னை அண்ணா சாலை வழியாக வருவதை அறிந்து, அவரைப் பார்க்க சென்றதாக தெரிவித்தனர். அண்ணா சாலையில் பினோய் பைக் சாகசங்களில் ஈடுபடும்போது அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக தெரிவித்தனர்.

முன்ஜாமீன் கோரி மனு
இதனையடுத்து பைக் சாகசங்களின் ஈடுபட்ட பினோயை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பினோய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி, தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி நிபந்தனை
அப்போது எந்த சாலையில் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டோரோ, அதே சாலையில் உள்ள சிக்னலில் நின்று காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு நேரம் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

விழிப்புணர்வு செய்யும் யூட்யூப் பிரபலம்
அதேபோல் கூடுதலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வாரத்தில் 6 நாட்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று முதல் தேனாம்பேட்டை சிக்னலில் நின்று யூ ட்யூபர் பினோய் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications