கோவை சம்பவம்.. "நான் சொல்லல" செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம்.. கத்தி கூச்சலிட்ட காயத்ரி ரகுராம்!
கோவை: கோவையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடக்கு பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை என்று நம்பி மக்கள் சிலர் மோசடி முகாம்களில் சிக்கியுள்ளனர்.
அண்மையில் மத்திய அரசு சார்பாக அவர்கள் மீட்கப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் தமிழ் வளர்ச்சிக்காக பாஜக சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவரை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

ஆங்கிலம் வளர்ப்பு
பின்னர் இந்தி திணிப்பு பற்றி கேள்விக்கு, திராவிட இயக்கத்தினர் எப்போதும் தமிழை வளர்க்கவில்லை. மாறாக அவர்கள் ஆங்கிலத்தையே வளர்த்தனர். தமிழை வளர்க்க விடாமல் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆங்கில பள்ளிக்கூடங்களே அதிகளவில் உள்ளது. எனவே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சியில் பாஜக பங்கு
தொடர்ந்து தமிழ் வளர்ச்சிக்காக பாஜக என்ன செய்தது என்ற கேள்விக்கு, நாங்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையின் மூலம் கூறி வருகிறோம். அதற்கே திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

கோவை விவகாரம்
தொடர்ந்து கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதன்பின்னர் 1998 குண்டுவெடிப்பு தொடர்பான புகைப்படத்தை ஒப்பிட்டு கோவை வெடி விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம்
அதற்கு அவர், நான் யாரையும் பயமுறுத்தவில்லை, அச்சமடைய வைக்கவில்லை என்றும் பதில் அளித்தார். இதற்குப் பின் ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம், செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், ஒப்பீடு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்று ஆவேசமாக குரலை உயர்த்தி ஆங்கிலத்தில் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக மிக்க நன்றி என்று ஆங்கிலத்தில் பலமுறை ஆத்திரமாக கூறிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications