பயமில்லை..பதற்றமின்றி கோவையில் தீபாவளி கொண்டாடினார்கள்..அச்சுறுத்த வேண்டாம் - செந்தில் பாலாஜி
கோவை: கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என்று கூறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி பதற்றமின்றி தீபாவளி பண்டிகை கொண்டாடியதாக தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டை மேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளியாகும் தகவல்கள்
இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். கோவையில் கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை
ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

சிறப்புப்படை
கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும் மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்

உளவுப்பிரிவில் கூடுதல் அதிகாரிகள்
கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி
கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், எஸ்.பி ஆகியோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பதற்றத்தை தணித்ததாக கூறினார்.

அச்சுறுத்த வேண்டாம்
சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளிகளின் பெயர்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. தவறு செய்தவர்கள் யார் என்று தீர விசாரித்து தொடர்புகளை விசாரித்துதான் கைது செய்தனர். பலரையும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தால் அது அந்த மதத்தை சேர்ந்தவர்களை அச்சுறுத்துவது போலாகி விடும் என்றும் கூறினார்.
ஊடகங்களில் அச்சுறுத்தும் வகையில் செய்திகள் வெளியிடுவது தவறானது என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.

வருத்தம்
கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது. அதற்காக மக்களை அச்சுறுத்தக்கூடாது. தமிழகம் முழுவதும் இருப்பது போன்ற தோற்றத்தை எழுதக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார். காவல்துறையினர் 12 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் சம்பவம் நடந்தாலும் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பொதுமக்கள் அச்சமின்றியும் பதற்றமின்றியும் தீபாவாளி பண்டிகையை கொண்டாடியதாகவும் தற்போதும் எந்தவித பதற்றமும் இன்றி இயல்பு நிலையில் கோவை மாநகரம் இருப்பதாகவும் செந்தில் பாலாஜி கூறினார்.












Click it and Unblock the Notifications