அடுத்த டார்கெட்.. அண்ணாமலைக்கு நெருக்கமான ‘மாநில’ புள்ளி.. நேரம் பார்த்து காத்திருக்கும் திமுக!
கோவை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான புள்ளியை திமுக அரசு டார்கெட் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரை விமர்சிக்கும் வகையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறாராம். நேரடியான அவதூறு பதிவை வெளியிடும்போது கப்பென பிடித்து கைது செய்யக் காத்திருக்கிறதாம் காவல்துறை.
அண்ணாமலையின் ஊரைச் சேர்ந்த அந்தப் புள்ளி தற்போது கோவையில் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இணைந்து உடனே மாநில அளவில் பொறுப்பையும் பெற்றார். கோவையில் தொழில் செய்யும் அவருக்கு அண்ணாமலை, கட்சிப் பொறுப்பை கொடுத்ததற்குக் காரணமே வேறொரு விஷயம் தானாம்.
சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவான பெரும் பட்டாளத்தையே இயக்கி வருகிறாராம் இந்தப் புள்ளி. சமீபத்தில் பாஜக-வில் ஏற்பட்ட சர்ச்சையில் கூட இவர் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக புள்ளி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பி வந்த கிஷோர் கே.சுவாமி கைது செய்யப்பட்ட நிலையில், திமுக அரசைப் பற்றி தொடர்ர்ந்து விமர்சித்து வந்த அரசியல் விமர்சகர் ஒருவரும் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக பற்றி பல விவகாரங்களைக் கிளப்பி விட்டு குடைச்சல் கொடுத்து வரும் பாஜகவைச் சேர்ந்த மாநிலப் புள்ளி ஒருவரும் கட்டம் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் தகவல் அறிந்த வட்டாரத்தினர்.

பூதாகரமாக்கும் நபர்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை இவர் தான் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக திருப்பிவிட்டு பூதாகரமாக்கி வருகிறார் என உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் தலைமைக்குப் போயிருக்கிறது. இதையடுத்து மேலிட உத்தரவைத் தொடர்ந்து, இவரை கூர்ந்து கவனித்து வருகிறதாம் கோவை காவல்துறை. விரைவிலேயே முதல்வர் அல்லது அமைச்சர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் சிக்குவார் என்கிறார்கள்.

அண்ணாமலைக்கு நெருக்கம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான 'செழிப்பான' பெயர் கொண்ட இந்தப் புள்ளி, அண்ணாமலைக்காக சமூக வலைதளங்களில் இயங்கும் பெரும் பட்டாளத்தையே வைத்திருக்கிறாராம். தனது பணிகளால், அண்ணாமலையைக் கவர்ந்து தான், திடீரென மாநிலப் பொறுப்பையும் அவர் வாங்கினார் என்கிறார்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களே.

தளபதி
சமீபத்தில் பாஜகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்தியில் இவர் பெயரும் கடுமையாக அடிபட்டது. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட நடிகை, இவரது பெயரைச் சொல்லி வெளிப்படையாகவே விமர்சித்தார். எனினும், தனது ஆஸ்தான படைத் தளபதியாக, சமூக வலைதளங்களில் களமாடும் இவர் மீதான புகார்களை மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டுகொள்வதே இல்லையாம்.

கண்காணிப்பு வளையம்
மாநிலப் பதவி கிடைத்த ஆர்வத்தில், திமுகவை எதிர்த்து தீவிரமாக கம்பு சுற்றி வரும் இவர், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரையும் விமர்சித்து பதிவிட்டு வருவது திமுகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே, அந்த நபர் காவல்துறையின் தீவிரமான கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறாராம். அவரது கொட்டம் அடங்கினால் சரி என்பதே பாஜகவில் பெரும்பாலானோரின் எண்ணமுமாம்.

அண்ணாமலைக்கு புரொமோஷன்
அண்ணாமலை எந்த மீட்டிங்கில் கலந்துகொண்டாலும் அவரை ஹீரோ போல சித்தரித்து வீடியோ வெளியிடும் டீமை நிர்வகித்து வருவதே இந்த நபர் தானாம். அவர் கட்சியை முன்னிறுத்தாமல், தனிப்பட்ட வகையில் அண்ணாமலையை புரொமோட் செய்து வருவதை மாநில நிர்வாகிகள் உட்பட பலருமே ரசிக்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications