அன்னூரில் தொழிற்பேட்டை..தொடர் போராட்டத்திற்கு முடிவு! நேரில் சமாதானம் செய்த ஆ.ராசா! என்ன ஆச்சு?
கோவை : கோவை மாவட்டம் அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில். விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டாலும் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் மட்டுமே தொழில் பூங்கா அமைக்கப்படும் என நீலகிரி எம்.பி ஆ.ராசா விவசாயிகளிடம் நேரில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
சிப்காட் அமைவதற்கு 6 கிராம பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வாகன பேரணி உண்ணாவிரத போராட்டம், கடையடைப்பு, நடைபயணம் என பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

அன்னூர் தொழிற்பேட்டை
மேலும் மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது சம்பந்தமாக விவசாயிகள் நமது நிலம் நமதே என குழு ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர் விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக,பா.ஜா.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக அரசு அன்னூரில் அமைய உள்ள தொழில்பேட்டைக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது ஏற்கனவே அங்குள்ள தனியார் நிறுவனங்களின் இடங்கள் மட்டுமே அமையும் என அறிவிப்பு வெளியிட்டது.

தொடர் போராட்டம்
இதனை ஏற்காத விவசாய அமைப்புகள் மற்றும் போராட்ட குழுவினர் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் போராட்ட குழுவினருடன் நீலகிரி எம்.பி ஆ.ராசா தமிழக அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினார். தனி அறையில் போராட்ட குழு தலைவர் குமார ரவிக்குமார், செயலாளர் ரவி உள்ளிட்ட குழுவினருடன் அரை மனி நேரத்திற்கு மேலாக நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில் காரசார பேச்சு வார்த்தை நடந்தது

ஆ.ராசா எம்பி
இதனையடுத்து வெளியே வந்த ராசா விவசாயிகளிடம் பேசினார். அப்போது பேசிய அவர் அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என உறுதி அளிக்கிறோம். இங்கு தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் மட்டுமே தொழில் பூங்கா அமைக்கப்படும் அதுவும் தண்ணீர்,நிலம் , சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள தொழிற்சாலைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
இங்கு ராணுவ தளவாடங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையே அதிகம் இருக்கும் என கூறிய ராசா விவசாயிகளை ஒருங்கிணைத்து எம்.பி,எம்.எல்.ஏ,ஆட்சியர் உள்ளடக்கிய குழு ஏற்படுத்தப்பட்டு அந்த குழு ஒப்புதல் அளிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே வரும் என உறுதி அளித்து சென்றார்

போராட்டம் தொடரும்
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழு தலைவர் குமார ரவிக்குமார்," பேச்சு வார்த்தை பயனுள்ளதாக இருந்ததாகவும் எம்.பி கூறிய 815 ஏக்கர் நிலமும் ஒரே இடத்தில் இல்லாமல் 90 இடங்களில் தனித்தனியாக உள்ளது. எனவே விரைவில் டிட்கோ தலைவர் நேரில் வந்து இந்த இடங்களை பார்வையிட உள்ளதாக கூறபட்டுள்ளது. அப்படி பார்வையிட்டாலே தெரிந்து விடும் இதில் தொழில்பேட்டை அமைக்க முடியாது என கூறிய அவர் அதுவரை போராட்டம் இருக்காது. அப்படி ஒருவேளை நிலம் கையகப்படுத்த முயன்றால் தங்களது போராட்டம் மீண்டும் தொடரும்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications