உதயநிதி இப்போது தானே வந்தாரு? நேரடியாக கோவைக்கே பிளைட் ஏறும் டெல்லி "தலை".. பாஜக போடும் "கணக்கு"
கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நிலவி வரும் நிலையில், தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா நாளை தமிழ்நாடு வர இருக்கிறார். அவரின் கோவை பயணத்திற்கு பின்பாக பல்வேறு முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நிலவி வருகின்றன. பாஜக மீது கடுமையான விமர்சனங்கள், விவாதங்கள் இணையத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் பற்றி காயத்ரி ரகுராம் விமர்சனங்களை வைத்தார்.
முக்கியமாக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்புதான் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் கட்சியில் தலை தூக்கியதாக குறிப்பிட்டார். சமீபத்தில் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் மௌனம் கலைத்தார். பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

காயத்ரி புகார்
சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது., என்று கூறினார். அதன்பின் பாஜகவில் திருச்சி சூர்யா - டெய்சி விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவர்கள் இருவருக்குமான ஆடியோ உரையாடல் பாஜகவில் புயலை கிளப்பியது.இதில் கேசவ விநாயகம் , எல் முருகன் மீது திருச்சி சூர்யா நேரடியாக புகார்களை வைத்தார். இதெல்லாம் பாஜகவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில்தான் பாஜகவில் இந்த உட்கட்சி மோதல் விவகாரங்களும், வீடியோ, ஆடியோ விவகாரங்களும் வெடித்து உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நிலவி வரும் நிலையில், தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா நாளை தமிழ்நாடு வர இருக்கிறார். அவரின் கோவை பயணத்திற்கு பின்பாக பல்வேறு முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகள் குறித்து நாளை ஜேபி நட்டா ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்
அதேபோல் தமிழ்நாட்டில் பூத் கமிட்டியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பாஜக நாளை ஆலோசனை செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா அதற்கு முந்தைய பயணத்தின் போதே கட்டளை போட்டு இருந்தார். ஆனால் இன்னும் பூத் வாரியாக பாஜகவிற்கு ஆள் பிடிக்க முடியவில்லை. பாஜக இதில் இன்னும் பின்னடைவை சந்தித்தே வருகிறது. பாஜக என்றாலே பூத் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வலிமைதான். பூத் கமிட்டியை அமைத்து அதன் மூலம் ஆட்களை பிடிப்பதுதான் பாஜகவின் தேர்தல் வியூகம். பல மாநிலங்களில் பாஜகவிற்கு இது சாதகமான முடிவை கொடுத்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பூத் வாரியாக இன்னும் வலிமை அடையவில்லை. இதை பற்றி நாளை ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

கோயம்புத்தூர்
முக்கியமாக கொங்கு மண்டலத்தில் கால் பதிக்க பாஜக தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் மட்டும் வலுவாக இருக்கும் அதிமுக அங்கும் உட்கட்சி மோதல் காரணமாக வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதிமுகவின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கும் விதமாக பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் தொடர்பாகவும் நாளை நடக்க உள்ள கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுதான் கோவையில் அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.

கோவை குறி
கோவையில் திமுக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. அங்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பணிகள் காரணமாக திமுக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட இங்கு திமுக சிறப்பாக செயலாற்ற இதுவே காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான் அங்கு உதயநிதியும் களமிறக்கப்பட்டு உள்ளார். இனி உதயநிதி அடிக்கடி கோவைக்கு விசிட் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் ஜேபி நட்டா கோவைக்கு நாளை வர உள்ளார். கடந்த தீபாவளிக்கு முன்பாக கோயம்புத்தூரில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் கார் சிலிண்டர் வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்த தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை என்ஐஏவிற்கு தமிழ்நாடு அரசு மூலம் மாற்றப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர். இந்த நிலையில்தான் நாளை ஜேபி நட்டா கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications