எஸ்.பி.வேலுமணியை விடாத சிக்கல்.. ஜேஆர்டி ராஜேந்திரன் கட்டிடங்களில் ரெய்டு.. கோவையில் பரபரப்பு!
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஜேஆர்டி ராஜேந்திரனுக்கு சொந்தமான கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
கடந்த மார்ச் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. அதில் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த ரெய்டில் கோவையில் செயல்பட்டு வரும் ஜேஆர்டி ராஜேந்திரன் வீட்டிலும் நடத்தப்பட்டது. இவர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் பிஸ்னஸ் பார்ட்னர் மற்றும் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. அந்த ரெய்டின் போது ராஜேந்திரன் நடந்துகொண்ட விதம், மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு வீட்டில் நடைபெற்ற போது, ராஜேந்திரன் மிகவும் மகிழ்ச்சியாக சிரித்தபடி நடந்துகொண்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் கை முழுக்க 10 விரல்களிலும் வைர மோதிரம், தங்க மோதிரம் அணிந்து, கருப்பு உடையில் இவரின் முகமும் மக்கள் மத்தியில் யார் என்ற கேள்வியை எழுப்பியது. இவர் கோவையில் செயல்பட்டு வரும் பிரபல ஜேஆர்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது பின்னர் அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்த நிலையில், ஜேஆர்டி ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திரனின் நிறுவனமான ஜேஆர்டி ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடுகள், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை கோவை மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜேஆர்டி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது அவரின் கட்டிடங்களில் சோதனை செய்யப்பட்டு வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தக் கட்டிடங்களுக்கு எப்போது அனுமதி கொடுக்கப்பட்டது, விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் செய்யப்பட்ட ரெய்டுகள் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியது. இதனால் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டும் நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications