கோவை வந்த மோடிக்கு வழி நெடுகிலும் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு.. வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார்
கோவை: ஒரு நாள் பயணமாக கோவை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து பி.எம். கிசான் திட்டத்தில் 21-வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையையும் மோடி இன்று விடுவித்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய வேளாண் மாநாட்டினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது விவசாயிகள் கூட்டமைப்பு கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கோவை வந்தார் மோடி
ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி அமைச்சர் சுவாமிநாதன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, ஏசி சண்முகம், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் சாலையில் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். பின்னர் இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர், இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் மோடி கலந்துரையாடினார். இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது விவசாயிகள் சிலர் பிரதமர் மோடியுடன் செல்பி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
விவசாயிகளுக்கு உதவித் தொகை
தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர்.
இதன் பின்னர் இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கியும் மோடி கவுரவிக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 3.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம், டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை ஒட்டி,கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை-அவினாசி ரோட்டில் இருந்து கொடிசியா வளாகம் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications
