கோவையில் பரபரப்பு: குழந்தைகள் உட்பட 7 பேருடன் மழை நீரில் சிக்கிய கார்! போராடி மீட்ட போலீசார்! சபாஷ்
கோவை : கோவையில், ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியிருந்த மழை நீரில் காருடன் சிக்கித் தவித்த குழந்தைகள் உட்பட 7 பேரை, கடும் போராட்டத்திற்குப் பின்னர் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் மாநகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாய்பாபா காலனி, பீளமேடு, ஆட்சியா் அலுவலகம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வேளாண்மைப் பல்கலைக் கழகம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், கணபதி, ரயில் நிலையம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மழையால் சாலையில் மழை நீா் தேங்கி அவிநாசி சாலை, உக்கடம், திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் உள்ள பாலங்களுக்கு அடியிலும் பெருமளவில் மழைநீர் தேங்கியது.

தேங்கிய மழை நீரில் சிக்கிய கார்
இந்நிலையில், கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், வடகோவை பகுதிக்கு செல்வதற்காக காரில் ராம்நகர் கிக்கானி பள்ளி வழியாக சென்றனர். தொடர் மழையால் ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் குளம்போல் தேங்கியிருந்தது. எனினும் மழை நீரை பொருட்படுத்தாமல், பாலத்தின் கீழ் உள்ள சாலையை கடந்துச் செல்ல முயன்றனர். அப்போது பாலத்தின் அடியில் தேங்கி இருந்த மழை நீரில் கார் சிக்கிக் கொண்டது. இதனால் காரில் இருந்த குழந்தைகள் உட்பட ஏழு பேரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.

கடுமையாக போராடி மீட்ட போலீசார்
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அந்த காரை பத்திரமாக மீட்டனர். இதனால் காரில் இருந்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டனர். தண்ணீர் தேங்கி நிற்பதை தெரிந்திருந்தும், ஆபத்தை உணராமல் பாலத்தின் கீழ் பகுதிக்கு ஏன் வந்தீர்கள் என மீட்கப்பட்ட குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்பிய போலீசார், இதுபோன்று இனிமேல் நடந்துகொள்ளாதீர்கள் என எச்சரித்தனர்.

மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்
கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சாக்கடை பணிகள் முறையாக செய்யாததன் விளைவாக, கோவை அரசு மருத்துவமனை முழுவதும் மழைநீர் தேங்கியது, மருத்துவமனை வளாகம் முழுவதும் முழங்கால் அளவு நீர் தேங்கி இருந்ததால், அவசர ஊர்தி வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோவை மாநகரப் பகுதியில் அடிக்கடி பெய்து வரும் கனமழையால், பாலம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம்போல் தேங்குவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications