தவெக கூட்டணியில் பாமக? காலப்போக்கில் தான் தெரியும்.. மழுப்பலாக பதில் அளித்த செங்கோட்டையன்!
கோவை: தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்து காலப்போக்கில் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக வெளியேறும் என்று திருமாவளவன் கூறி வரும் சூழலில், செங்கோட்டையனின் பதில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே விசிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளுடனும் சம உறவை கொண்டிருக்கிறது. விசிக அமைச்சரவையில் பங்கேற்றாலும், பாமகவுக்கு பல்வேறு வகையில் முக்கியத்துவம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தைக்கு முதல்வர் விஜய் தகைசால் தமிழர் விருதை வழங்கினார்.

அதேபோல் அமைச்சர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தொடர்ச்சியாக அன்புமணியுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மதுராந்தகம் இடைத்தேர்தலில் பாமக எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் ஆளும் தவெகவுக்கு தேர்தல் முடிவு சாதகமாக மாறியது. இதனால் பாமக மறைமுகமாக தவெகவுக்கு உதவியதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்ததாகவும் சில தகவல் வெளியாகியது. இதனால் விசிக தலைவர் திருமாவளவன், தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால், விசிக வெளியேறும். மதவாத பாஜகவும், சாதிவாத பாமகவும் இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்று அறிவித்தார்.
திருமாவளவனின் கருத்தை அமைச்சர் வன்னி அரசும் கூறி இருக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தவெக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆட்சியை தொடர தவெகவிடம் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை இருந்தாலும், பாமக ஆதரவு இருந்தால் கூடுதல் நன்மை என்று தவெக கருதுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம், தவெக கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செங்கோட்டையன், பாமக கூட்டணியில் இணைவது காலப்போக்கில் தான் தெரியும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து, பொதுவாக இந்த கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்ல இயலாது. பாமக வந்தால் என்று தான் விசிக சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கு பதில் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் தான் இலவச திட்டங்களை அறிவித்தோம். அதனை ஒன்றின் பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறோம். வெற்றிப் பயணம் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக அடுத்த சில நாட்களில் தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
