நல்ல மகராசன் எடப்பாடி பழனிசாமி! சென்னை செல்லும் வழியில் செங்கோட்டையன் திடீர் பாராட்டு
கோவை: என்னை மட்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கவில்லை என்றால் என்னால் அமைச்சராகியிருக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். என்னை தாங்கி பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கிறார் விஜய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: மழை பாதிப்பை சமாளிக்க முதல்வர் விஜய் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்.

மழை பாதிப்பை ஆய்வு செய்ய நானும் சென்னை சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் மழை பாதிப்பை சமாளிக்க முதல்வர் விஜயின் ஒப்புதலோடு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கும் இடத்திற்கு செல்வதற்கு, 250 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 15 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு வருவார்கள் என்று நான் எப்போதும் சொல்லவில்லை.
அதிமுகவில் இருந்து 15 பேர் வருகின்றனர் என்று தான் சொன்னேன். 15 அதிமுக எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நான் சொன்னதற்கு ஏதாவது ரிகார்ட் காட்டுங்கள்.
அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது; காலம் பதில் சொல்லும். பொதுவாக நான் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டி இருக்கிறார்கள்.
ஆனால் காலத்தை எவராலும் வெல்ல முடியாது. காலத்தை வென்று காட்டியவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய் தான். அதிமுகவில் கட்சியினரை நீக்குவதே பிழைப்பாக போய்விட்டது. இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது
அவருக்கெல்லாம் பதில் சொல்வது தேவையில்லை.
நல்ல மகராசன் எனக்கு நல்லது பண்ணி விட்டார். என்னை நீக்கவில்லை என்று சொன்னால் இன்று அமைச்சராகி இருக்க முடியாது. என்னை தாங்கி பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்; தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். அவருக்கு வாழ்த்துக்களை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.




Click it and Unblock the Notifications
