ராஜஸ்தான் டூ கோவை.. குட்கா சப்ளை கும்பலை மடக்கிய போலீஸ்.. 1 டன் போதைப்பொருள் பறிமுதல்
கோவை: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடந்தி வந்த இருவரை கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சில வியாபாரிகள் குறிப்பிட்ட குறியீடுகளை காட்டி வாங்குபவர்களுக்கு பிரேத்யேகமாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையைத் தடுக்க மாநகர போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் ரெய்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வடமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருள்கள் தொடர்ந்து மறைமுகமாக கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி. இவர், அங்கிருந்து குட்கா பொருட்களைக் கொண்டு வந்து கோவை மாவட்டத்தில் விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி என்பவரை வோல்ஸ்வேகன் காருடன் தனிப்படை போலீஸார் பிடித்தனர்.
அப்போது, ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்கள் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சர்வன் கிரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவருடன் சேர்ந்து பீளமேட்டைச் சேர்ந்த ராம்குமார் என்பர் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரையும் தனிப்படை போலீஸார் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, சரவணம்பட்டி பகுதியில் அவர்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களின் பதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, குட்கா பொருட்களை கடத்தப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் சர்வன்கிரி மற்றும் ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர் குட்கா பொருட்களை அங்கிருந்து கோவை மாவட்டத்துக்கு அனுப்புவதில் முக்கிய நபராகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஸை பிடிக்க தனிப்படை போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவரையும் பிடித்துவிடுவோம் என்று போலீஸார் உறுதியளித்துள்ளனர்.
இதேபோல, கோவை மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகள் சப்ளை செய்த சச்சின் கார்க் என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை, கஞ்சா, கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் விற்பனை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications