"இலங்கையை விட்டு வெளியேற திட்டமா?" ஓப்பனாக பேசும் நாமல் ராஜபக்ச.. வன்முறை குறித்தும் விளக்கம்
கொழும்பு: இலங்கை நாட்டில் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகளும் கூட பெரியளவில் பலன் தரவில்லை.
இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குக் கூட அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கலவரத்திற்கு காரணம்...மகிந்த ராஜபக்சேவை கைது செய்யுங்கள் - கொழும்பு நீதிமன்றத்தில் மனு

போராட்டம்
இப்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடிக்கு ராஜபக்ச அரசு தான் காரணம் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த இந்த மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கிருந்த அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவுகிறது.

ராஜினாமா
முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த மகிந்த ராஜபக்ச, பின்னர் நிலைமை மோசமானதை உணர்ந்து பதவி விலகினார். இந்தச் சூழலில் அவர் நாட்டை விட்ட தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் மகிந்த ரஜாபக்ச, அவரது மகன் உள்ளிட்ட 15 பேர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிபரை தூக்கி எறிய முடியாது
இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மகிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச அளித்த பேட்டியில், "அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் ஜனநாயக வழியை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அதிபரை எல்லாம் தூக்கி எறிய முடியாது. அரசு இல்லாமல் 48 மணி நேரத்திற்கும் மேலாக அரசு அதிபர் செயல்பட வேண்டி இருந்தது. இலங்கை அதிபர் ராஜினாமா செய்தால் அடுத்தது என்ன? இங்கு எதிர்க்கட்சி தலைவர்கள் என்று சிலர் உள்ளனர். அவர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதில் எங்களிடம் தெளிவான திட்டம் உள்ளது" என்றார்.

தடை
இலங்கை நாட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் பேசுகையில், "இதுபோல பயணத்தடைகள் எங்களுக்கு விதிக்கப்படுவது இது முதல் தடவையல்ல. எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த சமயத்திலும் நான்கு முறை பயணத்தடைகள் விதிக்கப்பட்டு இருந்தது. எங்களுக்கு நாட்டை விட்டுவெளியேறும் எண்ணம் இல்லை. மக்களுடன் இணைந்து பணியாற்றவும் இலங்கையில் இருக்கவும் விரும்புகிறோம்.

வன்முறை
எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ எந்த வன்முறையிலும் பங்கு இல்லை. நாங்கள் [ஆளும் கட்சி] வன்முறையைத் தூண்டுவதாகக் கூறுவது தவறானது. இந்த விஷயத்தில் விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இப்போது முதலில் நாம் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வர வேண்டும். மக்களின் கோரிக்கையின்படி பிரதமர் ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், சில வேண்டப்படாத குழுக்களால் தான் வன்முறை ஏற்பட்டது.

ஜனநாயகம்
அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்ற ஜனநாயக ரீதியில் பல வழி முறைகள் உள்ளன. 21வது சட்ட திருத்தம் மூலம் சில அதிகாரங்கள் ஒழிக்கப்படும். அதிபரின் அதிகாரம் குறைக்கப்படும்," என்றார். இலங்கையில் போராடும் மக்களின் ஒரு பகுதியினர் அதிபர் அதிகாரத்தைக் குறைக்கும் 21வது சட்டத் திருத்தத்தைக் கோரும் நிலையி்ல், நாமல் ராஜபக்ச அதற்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.