இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சேக்களின் வலதுகரம் தினேஷ் குணவர்த்தன- 18 அமைச்சர்களும் பதவியேற்பு!
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சேக்களின் வலதுகரமான தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் தினேஷ் குணவர்த்தன இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா உட்பட 18 அமைச்சர்கள் பிற்பகலில் பதவியேற்றனர்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்ற எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ரணில் வகித்து வந்த பிரதமர் பதவி காலியானது. பிரதமர் பதவிக்கு ராஜபக்சேக்களின் வலது கரமான தினேஷ் குணவர்த்தன பெயர் அடிபட்டும் வந்தது.

தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் இலங்கையின் 15-வது பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டார். ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர் தினேஷ் குணவர்த்தன. மகிந்த, கோத்தபாய ராஜபக்சேக்களின் வலதுகரமாக கட்சியிலும் ஆட்சியிலும் இருந்தவர்.

ரணிலின் சகா
1977-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் தினேஷ் குணவர்த்தன , இதுவரை 8 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். 73 வயதாகும் தினேஷ் குணவர்த்தன, இலங்கை வெளிவிவகாரம், கல்வி அமைச்சராகப் பதவி வகித்தவர். ராஜினாமா செய்துவிட்டு ஓடிய மாஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவால், கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டவர் தினேஷ் குணவர்த்தன. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் ராயல் கல்லூரி கால நண்பர்.

பொருளாதார பேரழிவு
இலங்கை தற்போது மிக மோசமான, அரசியல் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ளது. இதனால் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்தே பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கேவும் பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே தாம் பதவி ஏற்ற உடனேயே போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இதனால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தினேஷ் குணவர்த்தன, பிரதமராக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

18 அமைச்சர்கள் பதவியேற்பு
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் இலங்கையில் 18 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை அமைச்சர்கள் விவரம்: மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த், பந்துல குணவர்த்தண, கெஹலிய ரம்புக்வெல, விஜேதாச ராஜபக்சே, ஹரின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, விதுர விக்கிரமநாயக்க, காஞ்சன் விஜேசேகர,
நசீர் அகமது, ரொஷான் ரணசிங்க, மனுஷ நாணயக்கார, டிரான் அலஸ், நளின் பெர்னாண்டோ












Click it and Unblock the Notifications