சீனாவை துரத்தி.. குறுக்கே புகுந்து.. இலங்கைக்கு உதவிய இந்தியா.. மீனவர் பிரச்சனை தீர்க்க உதவுமா?
கொழும்பு: இலங்கை-சீனா இடையேயான எரிசக்தி ஒப்பந்தத்தை முடக்கி இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே மீன்பிடிப்பது தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே நயினாதீவு, அனலத்தீவு, நெடுந்தீவுகள் உள்ளன. இவை இலங்கைக்கு சொந்தமானவை. இதன் அருகே தான் கச்சத்தீவு உள்ளது.
50 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவுகளை இலங்கையின் குறிகட்டுவான் பகுதியில் இருந்து ஒரு மணி நேர படகு சவாரி செய்து அடையலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே 45 கிலோமீட்டர் தொலைவு பயணித்து இந்த தீவுகளை சென்றடையலாம்.

சீனா தலையீடு
கடந்த ஆண்டு இந்த 3 தீவுகளிலும் 12 மில்லியன் டாலர் மதிப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை சினோசோர்-எடெக்வின் என்ற சீன நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியது. இலங்கையின் சிலோன் மின்வாரியத்தின் சோலார் மின்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு ஆசிய மேம்பாட்டு வங்கியின் கடனுடன் நிதியளிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
இத்திட்டம் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அதாவது இந்திய கடல்பகுதிக்கு அருகே இத்திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது தான் இதற்கு காரணமாகும். இதனால் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் சீனா-இலங்கையின் ஒப்பந்தத்தை தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. அதன்படி திட்ட மதிப்பீீட்டில் 75 சதவீதத்தை மானியமாக வழங்க இந்தியா முடிவு செய்தது.

இந்தியா சாமர்த்தியம்
இதையடுத்து சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது. மேலும் 2021 டிசம்பர் 3ல், இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இத்திட்டம் குறித்து விவாதித்து இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சென்றார். அப்போது இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி ஜென்காங், "மூன்றாம் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சனை காரணமாக திட்டம் முன்னெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளது'' என அதிருப்தியை வெளியிட்டார். இதையடுத்து இலங்கை சார்பில் ஊடகங்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அதில், ‛‛நாங்கள் முதலில் எரிசக்தி திட்டத்தை கடன் மூலம் சீன நிறுவனம் வழியாக செயல்படுத்த முடிவு செய்தோம். ஆனால் இந்திய அரசு 75 சதவீத மானியத்தை திட்டத்துக்கு வழங்கியது. இதனால் சீன நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது'' என தெரிவித்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்நிலையில் தான் கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று இருந்தார். அப்போது இத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியாவுக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இலங்கை மீனவர்கள் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது இந்திய மீனவர்களால் தொடர்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்திய மீனவர்களுக்கான தினங்கள்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே நயினாதீவு, அனலத்தீவு, நெடுந்தீவுகள் உள்ளன. இவை இலங்கைக்கு சொந்தமானவை. இதன் அருகே கச்சத்தீவு உள்ளது. இங்கு தான் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர். இங்கு நமது மீனவர்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் குற்றச்சாட்டு
இதுபற்றி இலங்கையின் ராகீஸ்வரன், ஆரோக்கியதாஸ் ஆகியோர் கூறுகையில், ‛‛எங்களுக்கு எரிசக்தி தொடர்பான திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. இந்த பகுதியில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். மேலும் இழுவை படகுகளால் எங்கள் வலைகள் சேதப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வலைகள் நாசமாவதுடன், டீசலும் வீணாகிறது. இதனால் அதிகளவு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் "பாட்டம் ட்ராலிங்" என்ற முறையில் இந்தியர்கள் மீன் பிடிப்பதால் சிறுமீன்கள் கூட தப்பிக்காத நிலை உள்ளது. இதனால் மீன் இனம் முற்றிலுமாக அழிகிறது. இதனால் நாங்கள் மீன்கிடைக்காமல் தவிக்கிறோம். இங்கு தற்போது நண்டு மட்டுமே கிடைக்கிறது'' என்றார்.

எல்லை மீறும் மீனவர்கள்
தீவில் உள்ள ஆறு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் லீலியன் குருஸ் கூறுகையில், ‛‛ இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவது குறித்து பலமுறை புகார் அளித்துளோம். இதுதொடர்பாக இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிப்ரவரியில், இலங்கை கடற்படை 21 மீனவர்களை கைது செய்தது. மேலும் இந்தியாவின் அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது கூட நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாட்கள் வருகிறார்கள், ஆனால் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் காரைக்கால் போன்ற தொலைதூர மீனவர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வந்து மீன்பிடிக்கின்றனர்'' என்றார்.

2 ஆண்டு அவகாசம்
மேலும் "கச்சத்தீவு விழாவின்போது இருநாட்டு மீனவர்கள் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய தரப்பு அவர்களின் மீன்பிடி நடைமுறைகளை மாற்ற 2 ஆண்டு அவகாசம் கேட்டது. இது முடியாது. உள்நாட்டு போர் முடிவடைந்து வங்கி கடனில் வலை வாங்கி தொழில் துவங்கவே 3 ஆண்டுகள் எடுத்து கொண்டோம். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள வலைகள் அழிக்கப்படுகிறது. இதனால் எங்கள் கடல்வளம் கொள்ளை போவதுடன், நாங்கள் வாழ்வாதாரம் இழக்கிறோம்'' என்றனர்.

இந்தியா தீர்வு காண வேண்டும்
யாழ்ப்பான பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் அகிலன் கதிர்காமர் கூறுகையில், ‛‛மீனவர்கள் பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு காண வேண்டும். இதற்கு இழுவை படகை தடை செய்வதே ஒரே வழியாகும். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. அதேபோல் மீனவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். இலங்கை-இந்தியா இடையேயான இந்த உறவை பயன்படுத்தி மீன்பிடி பிரச்சனைக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானதாகும்'' என்றார்.

இந்தியா உதவி
இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்தியா சார்பில் தொடர்ச்சியாக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவ இந்தியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் மீனவர்கள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை இடையே பல ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இருநாட்டு அரசுகள் பேசியபோதிலம் இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications