இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?
கொழும்பு: இலங்கையில் பொதுமக்கள் கடும் கொந்தளிப்புடன் தமது ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியும் வருவதால் ஜனாதிபதி கோத்தபாய, மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக் கூடும் எனவும் இதற்காக கொழும்பில் 5 விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இலங்கையில் தேன்கூட்டில் கையை விட்ட கதையாக ராஜபக்சே சகோதரர்கள் விழிபிதுங்கி போயுள்ளனர். கொழும்பு காலிமுகத்திடலில் 30 நாட்களாக அரசுக்கு எதிராக அமைதி வழியில்தான் மக்கள் போராடினர். சிறிதும் வன்முறையில்லாமல் இலங்கை அரசு பதவி விலக கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

இதனால் நெருக்கடிக்குள்ளான மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டார் மகிந்த ராஜபக்சே. ராஜபக்சேவின் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனையடுத்து ராஜபக்சே ஆதரவு குண்டர்களை திருப்பி தாக்கி விரட்டியடித்தனர் பொதுமக்கள். இது தென்னிலங்கை முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இலங்கையில் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதனிடையே தலைநகர் கொழும்பில் எந்த நிமிடத்திலும் புறப்படுவதற்கு தயார் நிலையில் 5 விமானங்கள் தயாராக உள்ளன. இந்த விமானங்களை இயக்க 8 விமானிகளும் தயாராக உள்ளனர் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை பொதுமக்களின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்சே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லப் போகின்றனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் நாமல் ராஜபக்சே, வெளிநாட்டுக்கு மனைவியுடன் தப்பி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications