நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு - கணக்குகளை தர மறுப்பு
நடராஜர் கோயிலில் ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வரவு செலவு கணக்கு விபரங்களைத் தர தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.
சிதம்பரம்: பொதுதீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் கணக்கு விபரங்களை தர மறுத்து விட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் ஆய்வு நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினர் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்து சமய அறநிலையத் துறை கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஆணையர் ஜோதி அனுப்பிய கடிதத்தில் "சபாநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, சட்டப் பிரிவு 23 மற்றும் 33-ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் கோயில், குழு உறுப்பினர்களால் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள், 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வரவு செலவு கணக்குகள்
கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், அதற்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், அந்த சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப் பதிவேடு, மரப் பதிவேடு, திட்டப் பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முழுமையான ஒத்துழைப்பு தேவை
கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை மதிப்பீட்டறிக்கை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகியவற்றையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் ஆய்வு நடத்துவதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த நிலையில், கோயில் பொது தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இது எங்களை கட்டுப்படுத்தாது என்று கூறி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோவியிலில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தின் நகல்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பியுள்ளனர்.

சேகர்பாபு வருகை
இந்த குழுவினர் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் தீட்சிதர்கள் பதில் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இவ்வாறாக இந்து சமய அறநிலையத்துறையினரும், தீட்சிதர்களும் மாறி, மாறி நோட்டீசு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவரை தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார்.

தாரையில் அமர்ந்த அமைச்சர்
பின்னர் அவர், தரையில் அமர்ந்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுடன் கோவில் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார். சுமுகமான நிலை ஏற்படும் பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களது கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் பொதுதீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தீட்சிதர்களிடம் கோவில் வரவு செலவு கணக்குகள், சொத்து உள்ளிட்டவைகளை கேட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நடராஜர் கோவிலில் ஆய்வு நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த ஆய்வு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

கணக்குகளை தர தீட்சிதர்கள் மறுப்பு
இதனிடையே கணக்கு விபரங்களை அதிகாரிகளிடம் தருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீட்சிதர்கள் கணக்கு விபரங்களை தர மறுத்த காரணத்தால் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி சட்டத்திற்கு உட்பட்டு கோவில் செயல்படுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications