கள்ளக்குறிச்சி ரணகளத்தில் நடந்த ‘கொள்ளை’! பசுமாடுகளுடன் எஸ்கேப்பான ‘பூவரசன்’! கைது படலம் தொடருமா?
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தின் போது தனியார் பள்ளியில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற சின்னசேலத்தை சேர்ந்த 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாணவி படித்து வந்த பள்ளி முன்பு நேற்று முன்தினம் திடீரென 500-க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அது வன்முறையாக மாறியது. பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!

சூறையாடப்பட்ட பள்ளி
பள்ளி இருந்த நாற்காலிகள் சேர்கள் மாணவர் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தினர். அப்போது கிடைத்த இடைவேளையில் போராட்டக்காரர்கள் என்று கூறி பள்ளிக்குள் புகுந்த சிலர் அங்கு இருந்த பொருட்களை எல்லாம் முடிந்த அளவு அள்ளி சென்றனர்.

பொருட்கள் திருட்டு
ஏசி நாற்காலி கணினி உள்ளிட்ட எதையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றனர். மேலும் கலவரத்தின்போது தனியார் பள்ளியில் இருந்த பசு மாடுகளையும் திருடி சென்றனர். இதையடுத்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
கலவரத்தின்போது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களை கைப்பற்றினர்.

பசு மாடும் திருட்டு
கைப்பற்றப்பட்ட வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலவரத்தின்போது தனியார் பள்ளியில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற சின்னசேலத்தை சேர்ந்த பூவரசன், கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆதிசக்தி ஆகிய 3 இளைஞர்களை, சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தீவிர விசாரணை
மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சின்னசேலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலவரத்தில் தொடர்புடையோர், சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பியோர் உள்ளிட்டோரை கைது செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யும் படலும் தொடரும் என்கின்றனர் காவல்துறையினர்.