அண்ணின்னு கூட யோசிக்கலயே.. கடலூர் கிணற்றுக்குள் கிடந்த விசிக பிரமுகர்! மனைவியின் போனை தோண்டிய போலீஸ்
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் விசிக பிரமுகர் இளையராஜாவுக்கு என்ன நடந்தது? யார் இப்படி செய்தது? கிணற்றுக்கடியில் டூவீலர் எப்படி வந்தது? என்ற விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர். அப்போதுதான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி அஸ்வினிதா சிக்கினார்.. இப்போது மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ளது ஒரங்கூர் கிராமம்.. இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓரங்கூர் முகாம் செயலாளராக செயல்பட்டு வருபவர் இளையராஜா.. 39 வயதாகிறது.

முத்துசாமி என்பவரின் மகனான இளையராஜாவுக்கும், பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினிதாவுக்கும் (30) கடந்த 2016ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விஷ்ணு (10) மற்றும் மிதுன் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இவர்களது குடும்பம் சென்று கொண்டிருந்தபோதுதான், எதிர்பாராத விதமாக கள்ளக்காதல் விவகாரம் உள்ளே புகுந்துவிட்டது.
கிணற்றில் இளையராஜா
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ஒரங்கூர் கிராமத்திலுள்ள பெரியசாமி என்பவரது விவசாயக் கிணற்றில் இளையராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது ஸ்கூட்டர் அருகில் கிடந்ததால், ஆரம்பத்தில் சிறுபாக்கம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.. இளையராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் மதுபோதையில் கிணற்றில் விழுந்து இறந்தாரா அல்லது கொலையா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.
இதனிடையே உயிரிழந்த இளையராஜாவின் மனைவியான அஸ்வினிதாவின் நடவடிக்கைகளும் பேச்சும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அஸ்வினிதாவின் செல்போன் நம்பரையும் ரகசியமாக ஆய்வு செய்தனர்.. அத்துடன் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் பார்வையிட்டனர்.
அப்போதுதான், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகிலுள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (32) என்பவருடன் அஸ்வினிதா தினமும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தது அம்பலமானது. வெங்கடேசன், இளையராஜாவின் சித்தி மகன் ஆவார்..
அண்ணி அஸ்வினிதா
அண்ணன் என்ற முறையில் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது, வெங்கடேசனுக்கும் அஸ்வினிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் இளையராஜாவுக்கு தெரியவந்ததும் அவர் 2 பேரையுமே கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
அத்துடன் எந்நேரமும் அட்வைஸ் செய்து கொண்டிருந்த இளையராஜாவை கொலை செய்யவும் கள்ளக்காதல் ஜோடி முடிவு செய்தது.. இதற்காக கடந்த 11ம் தேதி இளையராஜா வெங்கடேசனுக்கு போனை போட்டு, மது குடிக்க அழைத்துள்ளார். வெங்கடேசனும் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (23) என்பவருடன் காரில் கீழ்கல்பூண்டிக்கு வந்துள்ளார்.
காரில் சடலத்துடன் கிளம்பிய வெங்கடேசன்
அங்குள்ள டாஸ்மாக் கடையில் 3 பேரும் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்து தண்ணி அடித்துள்ளனர்..
போதை தலைக்கு ஏறியதுமே இளையராஜா தனது மனைவியுடன் பழகக்கூடாது என வெங்கடேசனை கண்டித்துள்ளார்.. இதை வெங்கடேசன் ஏற்கவில்லை. உடனே வாக்குவாதம் வெடித்து, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் இளையராஜாவை சரமாரியாக அடித்து கொன்று விட்டார்.
கொலையை மறைப்பதற்காக நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இளையராஜாவின் சடலத்தை கீழ்கல்பூண்டிக்குக் கொண்டுவந்தனர்.. இளையராஜா ஓட்டி வந்த ஸ்கூட்டரை செல்வம் ஓட்டி வர, முன்னால் வெங்கடேசன் காரில் சடலத்துடன் ஒரங்கூருக்கு சென்றனர். அங்கு பெரியசாமியின் கிணற்றில் இளையராஜாவின் உடலை வீசிவிட்டு, ஸ்கூட்டரை ஓட்டி வந்து கிணற்றில் மோதியதில் அவர் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது போல் செட்டப் செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
விசிக பிரமுகர்
போலீசார் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன. இளையராஜாவை கொலை செய்ததையும் வாக்குமூலமாக தந்துள்ளனர்.. இதனையடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி அஸ்வினிதா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
விசிக பிரமுகர் அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!!


Click it and Unblock the Notifications
