விஎஸ் பாபு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! மக்களோடு மக்களாக பழகியவர்.. முதல்வர் விஜய் வேதனை
சென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ விஎஸ் பாபு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பொதுமக்களுடன் பொதுமக்களாக வாழ்ந்தவர் வி எஸ் பாபு என முதல்வர் விஜய் புகழாரம் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு, மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை அமைந்தரகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஎஸ் பாபு தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வர் விஜய் இரங்கல்
அவ்வப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ்ஜும் விஎஸ் பாபு உடல்நிலை குறித்து தெரிவித்து இருந்தார். விஎஸ் பாபு உடல் நிலை பற்றி துவக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக எந்த அறிக்கையும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகமல் இருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணியளவில் விஎஸ் பாபு மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
விஎஸ் பாபு மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் விஜய்யும், விஎஸ் பாபு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:--
ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த விஎஸ் பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
விஎஸ் பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. என்று கூறியுள்ளார். '
மு.க ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினும் விஎஸ் பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு விஎஸ் பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
விஎஸ் பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.





Click it and Unblock the Notifications
