பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி: ஆங்கிலேயர்களை விட மத்திய பாஜக அரசு மோசம்.. விளாசிய அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் விவகாரத்தை தொடர்ந்து, ‛‛ஆங்கிலேயர்கள் கூட உணவு பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை. நாட்டில் உள்ள பணவீக்கத்துக்கு மிகப்பெரிய காரணம் என்பது மத்திய அரசின் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு தான் காரணம்'' என ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி என்பது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது முதல் அதுதொடர்பாக ஏதாவது பிரச்சனை கிளம்பி தான் வருகிறது.

ஜிஎஸ்டி தொடர்பான விவாதம்
குறிப்பாக 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை சரிக்கட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு மாநிலங்களுக்கு முறையாக வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அடிக்கடி வார்த்தை போர் நீடித்து வருகிறது.

பரோட்டா வழக்கு
இதற்கிடையே தான் ஆமதாபாத்தில் உள்ள வாடிலால் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் குஜராத்தில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகார தீர்ப்பாயத்தில் ஒரு மனு செய்யப்பட்டது. அதில் சப்பாத்திக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிலையில் பரோட்டாவுக்கு 18 சதவீதம் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம் பரோட்டாவுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டது சரி தான் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜிஎஸ்டி வரி விவகார மேல்முறையீட்டு தீர்ப்பாயமான ஏஏஏஆரில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது சப்பாத்தி-பரோட்டா ஆகியவற்றை வெவ்வேறானவை என கூறியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

18 சதவீத ஜிஎஸ்டி சரி என உத்தரவு
இதனை விசாரித்த நீதிமன்றம் "மனுதாரரின் உணவு நிறுவனம் 8 வகை பரோட்டாக்களை விற்கிறது. மலபார் , மிக்ஸ்டு வெஜிடபிள், ஆனியன், மெதி, ஆலு, லச்சா, மூளி, ப்ளைன் உள்ளிட்ட பரோட்டா வகைகளை தயாரிக்கிறது. பரோட்டாவின் மூலப்பொருட்களாக கோதுமை மாவு, வெங்காயம், காய்கறி, உருளைக்கிழங்கு, மேதி உள்ளிட்டவை உள்ளன. கடைகளில் விற்கப்படும் பரோட்டாக்களை வாங்கிய பிறகு 3 அல்லது 4 நிமிடங்கள் சூடு செய்யப்பட வேண்டும். ஆனால், ரொட்டி, சப்பாத்தி போன்றவை நன்கு சமைக்கப்பட்டவை. அதனை அப்படியே சாப்பிட முடியும். இதனால் சப்பாத்திக்கும், பரோட்டோவுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே சப்பாத்தி, ரொட்டி வகையில் பரோட்டாவை சேர்க்க முடியாது. பரோட்டாவுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி சரி'' என உத்தரவிட்டது.

கெஜ்ரிவால் விமர்சனம்
இந்நிலையில் தான் மேற்கண்ட உத்தரவை சுட்டிக்காட்டி மத்திய அரசு தொடர்ந்து உணவு பொருட்களுக்கு விதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையை டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ ஆங்கிலேயர்கள் கூட உணவு பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை. இன்று நாட்டில் உள்ள பணவீக்கத்திற்கு மிகப்பெரிய காரணம் என்பது மத்திய அரசின் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பேயாகும். இது குறைக்கப்பட்டு, மக்களை பணவீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications