இதுவரை இல்லாத சாதனை.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று.. இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி
டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் இந்தியாவில் 2 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளன்று தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ளது சுகாதார அமைச்சகம்.
பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்தான், இன்று, வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணி வரை, நாடு முழுக்க 2 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம்.
ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்படுவது நமது நாட்டில், இதுவே முதல் முறையாகும்.

பிறந்த நாள்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை தடுப்பூசி அளவுகள் மூலம் வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற பாஜக அரசு முயற்சித்துள்ளது. எனவே திட்டமிட்டு தடுப்பூசிகளை வினியோகம் செய்து இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது சுகாதாரத் துறை அமைச்சகம்.

பிறந்தநாள் பரிசு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதுபற்றி ஹிந்தியில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக பிரதமருக்கு இது ஒரு பரிசு. இன்று, நரேந்திர மோடியின் பிறந்தநாளில், ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசிகள் என்ற வரலாற்று இலக்கை இந்தியா கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அருமை இந்தியா!" என்று அவர் கூறியுள்ளார்.

77 கோடி தடுப்பூசிகள்
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, இந்தியா மொத்தம் 77 கோடிக்கு மேற்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அதாவது ஒரு டோஸ் அளவுக்காவது இத்தனை கோடி பேருக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்பது பிரதமர் வழங்கிய உறுதிமொழியாகும். ஆனால் கடந்த சில மாதங்கள் முன்பு மந்த கதியில் தடுப்பூசி பணிகள் நடந்தன. அதை வைத்து பார்த்தால், இந்த இலங்கை எட்ட முடியாது என சர்வதேச ஊடகங்கள் கூட செய்திகளை வெளியிட்டிருந்தன. எதிர்க்கட்சிகளும், அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. இதையடுத்து தடுப்பூசி கொள்கையை மாற்றியது மத்திய அரசு. அதன்பிறகு வேகம் பிடிக்க ஆரம்பித்தது தடுப்பூசி போடும் பணிகள். இதே வேகத்தில் சென்றால், இந்தியா தனது இலக்கை எட்டிவிடும் என்று கணிக்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.

மைல் கல் சாதனை
ஆகஸ்ட் 31 அன்று, இந்தியா 1.30 கோடி டோஸ்களை ஒரே நாளில் செலுத்தியது. இதுவே அதிகபட்ச ஒற்றை நாள் தடுப்பூசி அளவாக இதுவரை இருந்து வந்தது. முன்னதாக, ஆகஸ்ட் 27 அன்று முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை இந்தியா எட்டியது. இதோ.. இப்போது அது 2 கோடியாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications