கோவை டூ பெங்களூர் உள்பட.. ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில்கள்.. வேற எந்த ரூட்டில் எல்லாம் தெரியுமா?
டெல்லி: அயோத்தி சென்ற பிரதமர் மோடி, கோவை - பெங்களூர் ரூட் உள்பட ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைத்தார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி இந்த சேவைகளை இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று ரூட்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 4 வந்தே பாரத் ரயிலாக கோவை - பெங்களூர் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் இந்த ரயில் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சுழலும் இருக்கைகள், விசாலமான ஜன்னல்கள், முழுவதும் ஏசி வசதி, பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் என வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.
பயண நேரம் குறைவு: தற்போது ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரயில் என்ஜின் தனியாக பெட்டிகளுடன் இணைக்கப்படும். ஆனால், வந்தே பாரத் ரயிலில் என்ஜினும் பெட்டிகளுடன் இணைந்தே இருக்கிறது. இதனால் இந்த ரயில் விரைவான பிக் அப் வசதி மற்றும் பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டது. அதிவேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களால் பயணிகளின் பயண நேரமும் கணிசமாக மிச்சம் ஆகிறது.
இதனால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு உள்ளது. தமிழ்நாட்டிலும் சென்னை - கோவை, சென்னை - பெங்களூர் வழியாக மைசூர், சென்னை- நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு ரூட்டாக பெங்களூர் - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அயோத்தியில் உற்சாக வரவேற்பு: அயோத்தியில் ராமர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா வருகிற22- ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அயோத்தி விமான நிலையமும் புதிதாக கட்டப்பட்டது. இதேபோல் அயோத்தியில் உள்ள ரயில் நிலையமும் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் அயோத்தி விமான நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அயோத்தி சென்றார். இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி அயோத்தி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி தொடங்கி வைத்தார்: தொடர்ந்து அயோத்தியில் சாலையில் மக்களை சந்தித்தப்படி சென்றார் பிரதமர் மோடி. அதாவது அயோத்தி விமான நிலையத்தில் இருந்து அயோத்தி ரயில் நிலையம் வரை பிரதமர் மோடி சாலை வழியாக வாகனத்தில் சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் குவிந்து இருந்த மக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியும் மக்களை பார்த்து கை அசைத்தபடி சென்றார்.

தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காணொலி வாயிலாக 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெங்களூர் - கோவை உள்பட 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது மட்டுமின்றி மேலும் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அம்ரித் பாரத் ரயில்: அயோத்யா - ஆனந்த் விஹார் முனையம், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புதுடெல்லி, அமிதசரஸ் - டெல்லி, மங்களூர்- மடேகன், ஜல்னா - மும்பை ஆகிய வழித்தடங்களிலும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதேபோல் 2 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்












Click it and Unblock the Notifications