சாமியார்கள் பேச்சு பெரும் ஆபத்து.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 76 வழக்கறிஞர்கள் பரபர கடிதம்!
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சாமியார்கள் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது.
இந்து ரக்சா சேனா அமைப்பின் தலைவர் பிரபோதானந்த் கிரி, பாஜக தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆயுதம் தூக்க வேண்டும்
''இந்து மதம் அழிகிறது. அண்டை நாடுகளில் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள். நம்முடைய நாட்டிலும் இந்துக்களுக்கு இதே நிலைதான். நாம் இப்போதே ஆயுதம் தூக்க வேண்டும். நாம்தான் தாக்க வேண்டும். கொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் கொல்லப்படுவோம் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து சாமியார்கள் மத வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்கள். இதேபோல் டெல்லியில் நடந்த இந்து சாமியார்கள் மாநாட்டிலும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக புகார் எழுந்தது.

என்வி ரமணாவுக்கு கடிதம்
இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் என்று கூறப்படுகிறது. பெயரளவுக்கு மட்டுமே இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்து சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

வெறும் வெறுப்புப் பேச்சுகள் மட்டும் அல்ல
துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர் மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ஹரித்வார் மற்றும் டெல்லியில் நடந்த நிகழ்வுகள் மற்றும் அங்கு வைக்கப்பட்ட கருத்துகள் வெறும் வெறுப்புப் பேச்சுகள் மட்டும் அல்ல; ஒரு சமூகத்தையே கொலை செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்புக்கு சமாகும்.

நடவடிக்கைகள் இல்லை
இந்த கருத்துகள் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு மட்டும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. மில்லியன் கணக்கான முஸ்லிம் குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் உள்ளது. இந்த வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக வெறுமென ஒருசிலர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளலாம்.

நீதித்துறை தலையீடு தேவை
இது தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் உங்களுக்கு சுட்டிகாட்ட விரும்புகிறோம். எனவே, இது போன்ற நிகழ்வுகளை தடுக்க நீதித்துறையின் அவசர தலையீடு தேவை. அரசின் நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்து இந்த கடிதத்தை எழுதுகிறோம். என்று அந்த கடிதத்தில் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications