திமுகவில் ‘பி’ டீம்.. பயனடைந்த கட்சியையே பழி வாங்க துடிக்கும் அமைச்சர் - போட்டுத்தாக்கிய தம்பிதுரை!
டெல்லி : திமுகவில் பி டீம் ஒன்று உள்ளது. அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடத்தும் சூழ்நிலை உள்ளது என அதிமுக எம்.பி தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்தபோது, மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி எப்படியெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் எனக் கூறியுள்ளார் தம்பிதுரை.
மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டண உயர்வு என அறிவிக்கப்பட்ட போது திமுக கடுமையான போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக விளக்கம் அளித்தபோது முதுகெலும்பில்லாத அரசு என திமுக விமர்சித்தது எனச் சுட்டிக்காட்டியுள்ளார் தம்பிதுரை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, "அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கும், சோதனை நடத்துவதற்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். இப்போதைய ஆளும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

பயனடைந்துவிட்டு பலி வாங்க துடிக்கிறார்
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி எப்படியெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு கட்சியில் பயனடைந்துவிட்டு அதே கட்சியை பழி வாங்கத் துடித்துக்கொண்டு இருக்கிறார் செந்தில் பாலாஜி.

திமுகவில் பி டீம்
அ.தி.மு.கவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது தி.மு.க ஆட்சி நடத்தும் சூழ்நிலை உள்ளது. தி.மு.கவில் 'பி' டீம் ஒன்று உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு பக்கத்து மாநிலத்தை பார் என்று கூறிக்கொண்டு இருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

அன்று விமர்சித்தீர்களே
அதிமுக ஆட்சி காலத்தில் மின் கட்டண உயர்வு என அறிவிக்கப்பட்ட போது திமுக கடுமையான போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு ஆளும் அரசான அதிமுக தரப்பில் மத்திய அரசு கூறியதால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என விளக்கம் அளித்தபோது அதிமுக அரசு முதுகெலும்பில்லாத அரசு என திமுக கூறியது.

பேசுவது ஒன்று செய்வது ஒன்று
ஆனால், இப்போது அதே திமுக ஆட்சியில் இருக்கும் போது மத்திய அரசு கூறுவதால் தான் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தை கூறுகிறார்கள். இது எந்த வகையில் ஏற்கத்தக்கது? தி.மு.க.வில் கோ பேக் மோடி என்றவர்கள் தற்போது கம் பேக் மோடி என்கிறார்கள். தி.மு.க. பேசுவது ஒன்று, செய்வது ஒன்று." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications