ஆப்கன் விவகாரம்.. தாலிபான் விஷயத்தில் மோடி அரசின் நிலைப்பாடு என்ன? வரிசை கட்டி நிற்கும் சவால்கள்
டெல்லி: ஆப்கானிஸ்தானை இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவது முதல் தாலிபான்களுடன் சுமுகமான உறவைக் கொண்டிருப்பது வரை மோடி அரசுக்குப் பல பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் எப்போது வெளியேறத் தொடங்கியதோ, அப்போதே அங்குத் தாலிபான்களின் தாக்குதல் தொடங்கிவிட்டது. ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசு கவிழும் என கிட்டதட்ட அனைவருமே கணித்திருந்தனர்.
ஆனால், தாலிபான்கள் இந்தளவுக்கு வலிமையாக இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் சில வாரங்களிலேயே தாலிபான்களால் ஒட்டுமொத்த தேசத்தையே கைப்பற்ற முடிந்துள்ளது.

ஆப்கன் விவகாரம்
ஆப்கன் விவகாரத்தில் இப்போது ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முடிவை எடுத்து வருகிறது. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த ரஷ்யாவும்கூட இப்போது தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே தாலிபான்களின் செயலை கண்டித்து வருகிறது. ஆப்கனில் இப்போது அஸ்ரப் கானி அரசு கவிழ்க்கப்பட்டு, புதிதாகத் தாலிபான்கள் அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மோடி அரசுக்கு இப்போது ஐந்து புதிய சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. இதை மோடி அரசு எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வரும் காலத்தில் இருக்கும்.

பத்திரமாக மீட்டு வருவது
மோடி அரசின் முன் இப்போது இருக்கும் முதல் சவால், அங்குள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவது. ஆப்கன் குடிமக்கள் பல ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது காபூல் ஏர் ஸ்பேஸ் மூடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 129 இந்தியர்கள் ஆப்கனில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், இன்னும்கூட பல ஆயிரம் இந்தியர்கள் அங்குச் சிக்கித் தவித்து வருவதால், அவர்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வருவதே இந்தியா முன் தற்போது இருக்கும் முக்கிய சவாலாகும், இந்நிலையில், ராணுவ விமானங்கள் மூலம் இந்திய அதிகாரிகளை அழைத்து வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யாருக்கு அனுமதி
ஆப்கன் குடிமக்கள் பல ஆயிரம் பேர் தலைநகர் காபூல் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் விசா வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், அவர்களில் யாருக்கு முதலில் விசா வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த காலங்களைப் போல ஆப்கனில் இருந்து வரும் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கப்படுமா அல்லது சிறுபான்மையினர்களுக்கு மட்டும் அடைக்கலம் அளிக்கப்படுமா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் தற்போது வரை இல்லை. ஒரு வேளை அனைவரையும் இந்தியா அனுமதித்தால் அத்தனை ஆயிரம் அகதிகளுக்கு ஏற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
Recommended Video

எதிர்ப்பு இல்லை
இந்தியா உட்பட 12 நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் அஸ்ரப் கானி அரசின் அதிகாரிகள், தாலிபான் அமைப்புடன் தோஹாவில் பேச்சுவார்த்தை நடத்தின. அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் மூலம் அமையும் ஆட்சியை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம்" என கூறப்பட்டிருந்தது. இப்போது அஸ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். தலைநகர் காபூலிலுள்ள அதிபர் மாளிகையைத் தாலிபான்கள் கைப்பற்றிய போது அந்நாட்டு ராணுவம் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை. இதனால் இப்போது தாலிபான்கள் விவகாரத்தில் இந்த 12 நாடுகளும் எந்த நிலைப்பாட்டை எடுக்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது
குறிப்பாக, அஸ்ரப் கானி அரசுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த இந்தியாவுக்கு இது மிக முக்கிய மற்றும் கடினமான முடிவாகும். இந்த மாதம் ஐநாவின் தலைமை பொறுப்பில் இந்தியா உள்ளது. எனவே, தாலிபான்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால் ஆப்கானிஸ்தான் மீது ஐநா பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏற்கனவே, சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவுக்கு சுமுகமான உறவு இல்லை என்பதால், மேலும் ஒரு நாட்டை பகைத்துக்கொள்ளாது என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

சுமுக உறவு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை இந்தியா அங்கீகரித்தாலும் சரி அங்கீகரிக்க மறுத்தாலும் சரி, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை இந்தியா தொடங்கியே தீர வேண்டும். கடந்த சில மாதங்களாகவே, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். காபூலில் உள்ள இந்தியர்கள் மற்றும் தூதரக பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அதேபோல வரும் காலத்தில் ஆப்கானிஸ்தானின் ஏர் ஸ்பேஸை பயன்படுத்துவது, அந்நாட்டுடன் வர்த்தகம் உள்ளிட்டவற்றைத் தொடர்வதிலும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மிக முக்கிய பிரச்சினை
இந்தியாவுக்கு இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ஆப்கனுடன் இந்தியா என்ன மாதிரியான உறவைக் கொண்டிருக்கும் என்பது தான். பாகிஸ்தான் உடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் தாலிபான்கள், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்குப் புகலிடம் அளித்தால், அதை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பது முக்கியமான ஒன்று. அதுபோன்ற சூழலில் புதிய அரசாங்கத்துடன் இந்தியாவின் செல்வாக்கு கணிசமாகக் குறையலாம். அதேபோல பாகிஸ்தான் நாட்டுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் இந்தியா ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கன் விவகாரத்தில் பிரச்சினைகள் இப்படி வரிசைக்கட்டி நிற்பதால், மோடி அரசு அதை எப்படிக் கையாளும் என்பதே இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும்.












Click it and Unblock the Notifications