தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜக முத்திரை.. அப்போது என்ன விளக்கம் என்ன தெரியுமா? மீண்டும் விஸ்வரூபம்
டெல்லி: தேர்தல் ஆணையம் தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக நாடு முழுக்க மிக பெரிய விவாதம் எழுந்துள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் பாஜகவின் முத்திரை இருந்ததும் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இதற்கு அப்போது தரப்பட்ட விளக்கம் என்ன.. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் தொடர்பாக கடந்த சில மாதங்களாக எடுத்திருந்த முடிவுகள் குறித்து மற்ற தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுபோல 14 முறை ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு இருந்ததாம்.

சர்ச்சை
இந்த சர்ச்சைக்கு நடுவே கடந்த மார்ச் மாதம் கேரளாவில் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் பாஜகவின் மாநில பிரிவு முத்திரை இடம்பெற்ற சம்பவமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அப்போது அந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் சாதாரண நிர்வாக ரீதியான தவறு என்று கூறியதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கையும் எடுத்திருந்தது.
பாஜக முத்திரை
அதாவது கடந்த மார்ச் மாதம் கேரள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையும் நாளில் இந்த விவகாரம் வெடித்தது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றில், கேரள பாஜக பிரிவின் முத்திரை இருந்தது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் எப்படி வெளியிட வேண்டும் என்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் கேரள பாஜகவின் முத்திரை இருந்தது.
இதை சிபிஎம் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியது. தேர்தல் ஆணையமும் பாஜகவும் ஒரே மையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. காங்கிரஸும் இதுகுறித்து கேள்வி எழுப்பியது.
சமாளிப்பு
ஆனால், கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கெல்கர் இதற்கு விளக்கம் அளித்தார். 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் கோரி கேரள பாஜக பிரிவு தேர்தல் அதிகாரியை அணுகியதாகவும், அதனுடன் அந்த கடிதத்தின் நகலை சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்த நகலில் ஏற்கனவே பாஜகவின் முத்திரை இருந்துள்ளது. அதை கவனிக்காமல் தேர்தல் அதிகாரி அதையே மற்ற அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவிட்டார் என தெரிவித்தது. கட்சி முத்திரை இருப்பதை கவனிக்காமல் அனுப்பியது தவறு தான் என்றும் அந்த தவறு கண்டறியப்பட்டதும் அந்த ஆவணம் திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தேர்தல் துணை சிஇஓ மற்றும் செக்ஷன் ஆபீசர் ஆகிய இருவரும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களது துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாகவோ அல்லது இதில் மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவோ எந்தவொரு தகவலும் இல்லை. இதை அப்படியே கிடப்பில் போட்டது போலவே தெரிகிறது.
போராட்டங்கள்
எதிர்க்கட்சிகளும் தலைமை தேர்தல் ஆணையர் மீதான சர்ச்சைகளை பெரிதாக எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் நாளுக்குள் ராஜினாமா செய்யாவிட்டால் அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸும் இது தொடர்பாக நாடு முழுக்க போராட்டத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
