பாஜகவில் இருங்கள்.. ஆனால் ஆம் ஆத்மிக்காக வேலை பாருங்க.. புது ரூட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: நீங்கள் பாஜகவிலே இருங்கள்.. பலருக்கு பாஜக பணம் கொடுக்கிறது.. எனவே, அந்த பணத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்காக வேலை செய்யுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தை பொருத்தவரை பாஜகவின் கோட்டையாக உள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.

டிசம்பரில் சட்டமன்ற தேர்தல்?
அந்த மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. குஜராத் சட்டப்பேரவையின் பலம் 182 ஆகும். இதில் 111 உறுப்பினர்களுடன் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி 63 எம்.எல்.ஏக்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக குஜராத்தில் இப்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குஜராத்திற்கு சுற்றுப்பயணம்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றிய உற்சாகத்துடன் குஜராத் பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கவனத்தை திருப்பியிருப்பது குஜராத் அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியிருக்கிறது. அடிக்கடி குஜராத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் தரமான இலவசக்கல்வி உள்பட பல்வேறு சலுகைகளை அள்ளி தெளித்து வருகிறார்.

பாஜக என்ன கொடுத்தது?
இந்த நிலையில், குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்கோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:- எங்களுக்கு பாஜக தலைவர்கள் யாரும் தேவையில்லை. எனவே அவர்களை பாஜகவே வைத்துக்கொள்ளட்டும். பாஜகவின் கடைநிலை நிர்வாகிகள், தொண்டர்கள் ஆம் ஆத்மியில் திரளாக இணைகின்றனர். அவர்களிடம் நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான்... இத்தனை அண்டுகள் கட்சிக்காக பணியாற்றிய உங்களுக்கு பாஜக என்ன கொடுத்தது?

பாஜகவிலே இருங்க
பாஜக தரமான இலவச கல்வியை கொடுக்கவில்லை. பாஜக தொண்டர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதியை அளிக்கவில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சி உங்களின் நலனில் அக்கறை கொள்ளும். நீங்கள் (பாஜக தொண்டர்கள்) பாஜகவிலே இருங்கள்.. ஆனால், ஆம் ஆத்மிக்காக பணியாற்றுங்கள். பலருக்கு பாஜக பணம் கொடுக்கிறது. எனவே, அதை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால்,எங்களுக்காக வேலை செய்ய வேண்டும். ஏனெனில், எங்களிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை.

எங்களுக்கு பணியாற்றுங்கள்
ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் குஜராத்தில் இலவச மின்சாரம் அளிப்போம். தரமான கல்வியை கொடுப்போம். உங்களின் பிள்ளைகள் அங்கு இலவசமாக படிக்கலாம். மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்துள்ளது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர உழைப்பதில் எந்த பயனும் கிடையாது. எனவே பாஜகவில் இருந்து கொண்டே எங்களுக்கு பணியாற்றுங்கள் என பாஜகவினருக்கு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

நாங்கள் கோழைகள் அல்ல
ஆம் ஆத்மி பொதுச்செயலாளர் மனோஜ் சோரதியா மீதான தாக்குதல் குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ''குஜராத் மக்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பதால் பாஜக விரக்தி அடைந்துள்ளது. இதனால், பாஜக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரசை போல நாங்கள் கிடையாது. ஆம் ஆத்மியை யாராலும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் கோழைகள் அல்ல. நாங்கள் ஊழலுக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் கடுமையாக போராடுவோம். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கு தற்போது ஒரு மாற்று கட்சி கிடைத்துள்ளது. பாஜகவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications