சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன?
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோருடன் தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும், அண்ணாமலை வெளியேறிய பின் ஏற்பட்ட சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆலோசனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக பாஜகவில் சமீபகாலமாக பல்வேறு அரசியல் அதிரடிகளும், உள் கட்சி மாற்றங்களும் நிகழ்ந்து வரும் சூழலில், நாட்டின் தலைநகர் டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபினுடன் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர்மட்டக் குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிஎல் சந்தோஷ், அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, ராம சீனிவாசன், கருப்பு முருகானந்தன், ஏபி முருகானந்தம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பாஜக மாநில முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவுக்குள் சலசலப்புகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவியது.
இந்தச் சூழலில், அந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கட்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துவிட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தரப்பில் தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் உட்கட்டமைப்பு பலவீனம் குறித்து விரிவாக பேசி இருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்திருந்தாலும், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு பாஜகவுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. இதுதொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அடுத்தக் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பாஜக தங்களின் பணிகளை மேற்கொள்ளவும் டெல்லி மேலிடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications