ரிஷி சுனக் இந்தியரே இல்லை.. அவர் 100% பிரிட்டிஷ் தான்.. ஆனாலும் அவர் ஆரியர்! சொல்வது பாஜக உமா பாரதி
டெல்லி: பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜகவின் உமா பாரதி கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த சில தவறான நடவடிக்கைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்
இதையடுத்து புதிய பிரதமரைத் தேர்வு நடந்த தேர்தலில் ரிஷி சுனக்கிற்கு மட்டுமே தேவையான ஆதரவு கிடைத்தது. இதனால் போட்டியின்றி அவர் பிரிட்டன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரிஷி சுனக்
கடந்த புதன்கிழமை ரிஷி சுனக்கை மன்னர் சார்லஸ் பிரதமராக நியமித்தார். 42 வயதான ரிஷி சுனக் தான் பிரிட்டனில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் ஆனவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அங்கு இந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவதும் இதுவே முதல்முறையாகும். மேலும், ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

உமா பாரதி
இந்தியாவில் இருந்தும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்தியாவில் இதேபோல வெளிநாட்டை வம்சாவளியைக் கொண்டவர் தலைமை பொறுப்பிற்கு வரும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தச் சூழலில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

இந்தியர் இல்லை
ரிஷி சுனக்கின் குடும்பம் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் அவர் முற்றிலும் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அதேநேரம் அவர் இந்து என்பதால் அது சாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், " "இங்கிலாந்தின் பிரதமராக, ரிஷி சுனக்கிற்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனென்றால் இக்கட்டான நிலையில் உள்ள நாட்டின் தலைமை பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.

ஆரியர்
அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு இந்து என்பதும் நாம் அனைவரும் ஆரியர்களாக இருப்பதைப் போன்றது தான். அவரது குடும்பம் மூன்று தலைமுறைக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தார் ஒருவர். அவர் 100% ஒரு பிரிட்டிஷ்காரர். அதேநேரம் ரிஷி சுனக் வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்..

இந்து
ரிஷி சுனக் ஒரு இந்துவாக இருப்பதால் ஒரு நன்மை இருக்கிறது.. அவர் சிறிய இதயம் கொண்டவராக இருக்கமாட்டார். உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக அழைத்துச் செல்லும் திறன் அவருக்கு நிச்சயம் இருக்கும். இந்த குணத்தின் காரணமாக இப்போது எதிர்கொண்டுள்ள சவாலான நிலையில் இருந்து பிரிட்டன் நாட்டை அவரால் மீட்க முடியும்.

விவாதம்
அவரது மதம் மற்றும் அவரது இனம் குறித்து இந்தியாவில் நடக்கும் விவாதம் கேலிக்குரியது.. இதை வைத்து அரசியல் செய்ய முயலும் காங்கிரஸ் கட்சியினருக்கு என்ன சொல்வது. ஆனால், பாஜகவினருக்கு மட்டும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் விவாதத்தில் எல்லாம் ஈடுபட வேண்டாம். நாடு முழுவதும் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிந்து கிடந்த ஒரு நாட்டில் இப்போது வறுமையின் இருள் எப்படிச் சூழ்ந்தது என்பது குறித்துத் தான் நாம் விவாதம் செய்ய வேண்டும்.

நமக்கு ஏற்படுமா
நமக்கு அதுபோன்ற நிலை ஏற்படுமா? தைரியமாகச் சொல்லலாம். அதுபோல எந்தவொரு நிலையும் நமக்கு ஏற்படாது. இங்கிலாந்தில் மிகக் குறைவான இயற்கை வளங்கள் இருந்தன.. அதன் செல்வம் உலகின் பிற நாடுகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், இந்தியா என்பது இயற்கையாகவே அதிகப்படியான வளங்களைக் கொண்ட ஒரு நாடாகவே உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications