ரூ.80,072 கேன்சர் ஊசி விலை இனி வெறும் ரூ.7,150 தான்.. 137 மருந்துகள் விலைக்கு கடிவாளம் போட்ட அரசு
டெல்லி: கேன்சர் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இந்தியாவில் 137 கேன்சர் மருந்துகளின் லாப வரம்புக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முக்கியமான நடவடிக்கையால் சில மருந்துகளின் விலை பல மடங்கு குறையவுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகின்றன.
இந்தியாவில் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்து தரப்பினருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இப்போது கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிம்மதி கொடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

கேன்சர் மருந்துகள் விலை குறைப்பு
அதன்படி இந்தியாவில் 137 கேன்சர் மருந்துகளின் லாப வரம்புக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் காரணமாக சில மருந்துகளின் விலை பல மடங்கு குறையவுள்ளது. தற்போது ரூ.40,421க்கு விற்கப்படும் பால்போசிக்லிப் (Palbociclib) கேப்சூல்களின் விலை ரூ.2,720ஆக குறையும். அதேபோல ரூ.80,072 விலையுள்ள தியோடெபா ஊசியின் விலை ரூ.7,150ஆகவும் குறையவுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகின்றன.
அதேநேரம் அனைத்து மருந்துகளின் விலையும் குறைந்துவிடும் என சொல்ல முடியாது. அதிக விலையுள்ள சில புதிய கேன்சர் மருந்துகளின் விலை இதில் குறைவதில்லை. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 30 ஒசிமெர்டினிப் மாத்திரைகள் கொண்ட ஒரு பேக்கின் விலை ரூ.4.16 லட்சமாகவே தொடர்கிறது.
மத்திய அரசு உத்தரவு
முன்னதாக அக்டோபர் 17ம் தேதி தான் மத்திய அரசு மற்றொரு முக்கிய உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதில் ஏற்கெனவே நேரடி விலை கட்டுப்பாட்டில் இல்லாத 137 புற்றுநோய் மருந்துகளுக்கு, அதிகபட்ச சில்லறை விலையில் 30 சதவீதம் மட்டுமே லாபம் இருக்கலாம் என்று வரம்பை நிர்ணயம் செய்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமான NPPA இது குறித்து அக்டோபர் 27ம் தேதி செய்திக்குறிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் 543 மருந்துகளுக்கு புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
இதன் மூலம் 543 மருந்து வகைகளில் 397ன் விலை குறைந்துள்ளது. 146 வகைகளின் விலையில் மாற்றமில்லை. 97 வகை மருந்துகளுக்கு விலை 70 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. 50 வகை மருந்துகளுக்கு 80 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 5 வகை மருந்துகளுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமாகவும் விலை குறைந்துள்ளது.
ரத்த புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் டைரோனிப் (Dyronib) என்ற மருந்தின் 60 மாத்திரைகள் கொண்ட பேக்கின் விலை ரூ.17,811ல் இருந்து ரூ.1,808ஆக குறைகிறது. புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அபிராட் மருந்தின் 120 மாத்திரைகள் கொண்ட பேக்கின் விலை ரூ.36,089ல் இருந்து ரூ.4,064ஆகவும், பெவாசிசுமாப் (Bevacizumab) ஊசி மருந்தின் விலை ரூ.65,205ல் இருந்து ரூ.8,957ஆகவும் குறைகிறது.
எதன் விலை குறையவில்லை
அதேநேரம் காப்புரிமைக்கு கீழே இருக்கும் மருந்துகள் விலையில் மாற்றமில்லை. குறிப்பாக ஒசிமெர்டினிப் (Tagrisso) ரூ.4.16 லட்சம், அலெக்டினிப் (Alecensa) ரூ.4.31 லட்சம், ட்ரெமெலிமுமாப் (Imjudo) ரூ.4.18 லட்சம், டோஸ்டார்லிமாப் (Jemperli) ரூ.3.91 லட்சம் எனத் தொடர்கின்றன. காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு நேரடியாக விலையை கட்டுப்படுத்த முடியாது என்ற போதிலும் இந்த மருந்துகளுக்கான போட்டியை அதிகரிக்கவும், வேறு நடவடிக்கை மூலம் அதன் விலையை குறைக்க நடவடிக்கைகளை பரிலீசனை செய்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
பொதுவாக கேன்சர் சிகிச்சை என்பது பல மாதங்கள் வரை தொடரும். இதனால் மாதந்தோறும் மருந்துகளுக்கு என்றே கணிசமாக பெரிய தொகை செலவிட வேண்டி இருக்கும். அதில் சில ஆயிரம் ரூபாய் குறைந்தாலும் கூட அது குடும்பங்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும். அதை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
