அடுத்த அதிரடியை ஆரம்பித்த கரப்பான் பூச்சி கட்சி.. நாடு முழுக்க களமிறங்க திட்டம்! வெளியான அறிவிப்பு
டெல்லி: கரப்பான் பூச்சி கட்சிக்கு இப்போது தற்போது தேர்தல் அரசியலில் களமிறங்கும் திட்டம் இல்லை என்றும் அதற்கு பதிலாக நாடு முழுவதும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக இருக்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார். மேலும் நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் குறித்து மக்களின் கருத்துகளை அறியும் வகையில் நாடு தழுவிய பிரச்சாரத்தையும் அவர் அறிவித்தார்.
கடந்த மாதம் நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க மிக பெரியளவு ஆதரவு கிடைத்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆலோசனை
இந்தச் சூழலில் தான் கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிஜீத் தீப்கே சிலமுக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது கரப்பான் பூச்சி கட்சி இப்போது தேர்தல் அரசியலில் பங்கேற்காது என்ற அவர், மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக கரப்பான் பூச்சி கட்சி இருக்கும் என்றார்.
மேலும், நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் குறித்து மக்களின் கருத்துகளை அறியும் வகையில் நாடு தழுவிய பிரச்சாரமும் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக அவர் அறிவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்த கருத்துகளை கேட்டறிவார்கள். மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்களின் மனநிலையை அறிய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களிடம் கருத்து கேட்பு
இது தொடர்பாக அவர் கூறுகையில், "'மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்கவுள்ளோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக அறிந்து கொள்வோம். நாங்கள் அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரவும் தகவலில் உண்மை இல்லை. தற்போதைக்கு இந்தியாவுக்கு தேவை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இயக்கம் தான். இப்போது கரப்பான் பூச்சி கட்சி அப்படிப்பட்ட ஒரு இயக்கமாகவே இருக்கும்.
வரும் காலங்களில் கல்வி தொடர்பான பிரச்சினைகளை மட்டுமல்லாமல்.. நாட்டின் ஆட்சிமுறை மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்தும் கவனம் செலுத்துவோம். அரசியல் அமைப்பு, நீதித்துறை, ஊடகங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகள் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அந்த அமைப்புகளில் பொறுப்புணர்வையும் நடுநிலையையும் மீட்டெடுக்க மக்கள் அழுத்தத்தை உருவாக்க வேண்டும். தற்போதைய அரசியல் அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்றார்.
வேலைவாய்ப்பின்மை
வேலைவாய்ப்பின்மை இந்தியாவின் மிக பெரிய பிரச்சினையாக மாறிவிட்டதாக குறிப்பிட்ட அபிஜீத் தீப்கே, இதை நாடு முழுவதும் முக்கிய பிரச்சினையாக எடுத்து செல்ல கரப்பான் பூச்சி கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் கல்வி சீர்திருத்தத்திற்காகவும் தனியாக இயக்கம் நடத்தப்படும் என்றும் பள்ளிகள் அனைத்தும் வணிகமயமாகிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். கல்வி இன்று லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளதாக சாடிய அவர், அதை மாற்ற வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றார்.
மிக பெரிய வெற்றி
அவர் மேலும், "கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி நடத்திய போராட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நீட் லீக் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் மிக பெரிய வெற்றி தர்மேந்திர பிரதானின் ராஜினாமா தான்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் கரப்பான் பூச்சி கட்சியை அமைப்பு ரீதியாக விரிவுபடுத்துவது எப்படி, இந்த இயக்கத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
