ராகுல் காந்தி பாத யாத்திரையில் பங்கேற்ற.. காங். எம்பி சந்தோக் சிங் திடீரென மயங்கி விழுந்து மரணம்
டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது நாடு முழுக்க பாத யாத்திரை சென்று வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி இதுவரை இந்தளவுக்கு பெரிய பாத யாத்திரையை முன்னெடுத்ததே இல்லை.. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த பாத யாத்திரையில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி பாத யாத்திரை
இந்த பாத யாத்திரையை ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலத்தில் நடத்தி வருகிறார். இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை ஃபில்லூரில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த போது காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காங்கிரஸ் எம்பி மரணம்
இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். மேலும், யாத்திரையும் இப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை முதல் பஞ்சாப்பில் பாத யாத்திரை தொடங்கி நடத்தி வரும் நிலையில், இப்போது அங்கு காங்கிரஸ் எம்பி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு
ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற சந்தோக் சிங்கிற்கு 76 வயதாகிறது. உயிரிழந்த சந்தோக் சிங் ஜலந்தர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றவர். சந்தோக் சிங்கிற்கு ஏற்கனவே வேறு எதாவது உடல்நிலை பாதிப்புகள் இருந்ததாக தெரியவில்லை.. காங்கிரஸ் எம்பி மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிக பெரிய இழப்பு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இரங்கல்
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்விட்டரில், "காங்கிரஸ் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரது இழப்பு கட்சிக்கும் அமைப்புக்கும் பெரும் இழப்பாகும்.. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக துணையாக இருப்போம்.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இந்த காங்கிரஸ் எம்பி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யாத்திரையில் மாற்றம்
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், "ஜலந்தரின் காங்கிரஸ் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரி, இன்று காலை பாரத் ஜோடோ யாத்திரையின் போது திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் காரணமாக பாத யாத்திரை திட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கும். அது குறித்த தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications