டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புதான்... பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.... அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இருந்தபோதும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று 2716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த மே 21-ந் தேதிக்குப் பின்னர் அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது. முந்தைய நாளைவிட இது 51% அதிகமாகும்.

351 பேருக்கு ஓமிக்ரான்
டெல்லியில் தற்போது ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 351. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

பீதி வேண்டாம்
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்காக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். டெல்லியில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6360. ஆனால் 3 நாட்களுக்கு முன்னர் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2291. கடந்த 3 நாட்களில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் டிசம்பர் 29-ந் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 923 ஆக பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 30-ந் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்தது. ஜனவரி 1-ந் தேதி மேலும் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஜனவரி 1-ந் தேதி மட்டும் 2796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,100 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

மருத்துவமனை படுக்கைகள்
மருத்துவமனைகளில் இதுவரை 246 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளில் 82 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாக டெல்லியில் இதே நிலைமைதான் நீடிக்கிறது. ஆக்சிஜன் தேவை என கொரோனா பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனைக்கு வரவில்லை. டெல்லியில் 37,000 படுக்கைகள் தயாராக உள்ளன. பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications