இன்னும் பலர் சிக்கி உள்ளனர்.. 3வது மாடியில் நடந்தது என்ன? டெல்லி தீ விபத்து.. போலீஸ் பரபர தகவல்
டெல்லி: டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இன்னும் பலர் கட்டிடத்திற்கு உள்ளே சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இருக்கும் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லி வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் இதுவும் ஒன்று என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி வணிக வளாக தீ விபத்து.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.. 40 பேருக்கு பலத்த தீக்காயம்.. பரிதாபம்!

என்ன நடந்தது?
தீ விபத்து குறித்த தகவல் மாலை 4.40 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். இதுவரை 60 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மாடிகள்
முதல் இரண்டு மாடியில் சிக்கி இருந்தவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டனர். தற்போது மூன்றாவது மாடியில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மூன்றாவது மாடியில் சிக்கி இருக்கும் நபர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராட்சச கிரேன்கள் மூலம் உள்ளே இருப்பவர்களை மீட்டு வருகின்றன.

மூன்றாவது மாடி
ஆனாலும் உள்ளே இடிபாடுகள் மோசமாக இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது 3வது மாடியில் கடுமையான புகை மண்டலம் சூழ்ந்தது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் உள்ளேயே இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளன. இங்குதான் தீயின் வீரியம் அதிகம் இருந்தது.

பலி எண்ணிக்கை
இதன் காரணமாகவே மூன்றாவது மாடியில் இருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். தீ விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர். மின்கசிவா அல்லது வேறு காரணங்கள் இதற்கு இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.