டெல்லி கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. இணையதள சேவை முடக்கப்பட்டது. பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டத்தை முடக்க மத்திய அரசு முன்கூட்டியே பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டது.
குறிப்பாக டெல்லிக்குள் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் வர தடை விதிக்கப்பட்டது. 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும், ஹோட்டல்கள், விடுதிகளில் புதிய புக்கிங் எடுக்க கூடாது, இணையதள சேவை என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பேபி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது நீதிமன்றம், ''ஈயை கொல்ல பெரிய சுத்தியலை பயன்படுத்த முடியாது. இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை பெறுவதற்கான உரிமை உள்ளது. இதனால் மூடப்பட்ட மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கட்டுப்பாட்டிற்கும் முழுமையான முடக்கத்திற்கும் வித்தியாசம் உள்ளது.
அதேவேளையில் கட்டுப்பாடுகள் விதிக்க காவல்துறைக்கு முழு அதிகாரம் நிச்சயமாக உண்டு. அதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அதற்காக எல்லாவற்றையும் முடக்கிவிட்டு மக்களைப் போக்குவரத்து வசதி ஏதுமின்றி தவிக்கவிட முடியாது. இதனால் மக்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தற்போதைய கடடுப்பாடுகளை தளர்த்த வேண்டும்'' என உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இதுபற்றி அரசுடன் கலந்தாலோசித்து நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் நேற்றைய தினம் டெல்லியில் மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் என்று மொத்தம் 245 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 47 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு, ஜந்தர் மந்தரை சுற்றிய 4 கிலோமீட்டர் சுற்றளவில் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
இதனால் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு அவசரமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி மோகனா அமர்வில் இன்று விசாரணை நடத்த உள்ளனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்பது உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை தினமாகும். ஆனால் தற்போது டெல்லியில் நடக்கும் போராட்டத்தின் தீவிரவத்தன்மையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications
