வழக்கும் தொடுத்துவிட்டு போராட்டமும் செய்வீர்களா?.. விவசாயிகள் போராட்டம்.. கண்டித்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக கண்டிப்பு காட்டி உள்ளது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த ராஜஸ்தான் விவசாயிகள் அமைப்பு வைத்த கோரிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டி உள்ளது.
நாடு முழுக்க பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப்பில் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதமாக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்து இருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று நடந்த விவசாய போராட்டத்தின் போது பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விவசாயிகள் கொலை செய்யப்பட்டனர். 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்டனர். மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவிற்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

அனுமதி கோரிக்கை
இதில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் கார் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிஷான் மஹாபஞ்சாயத்து என்ற விவசாய அமைப்பு ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 200 விவசாயிகள் போராட்டம் செய்ய போகிறோம், அனுமதி தாருங்கள் என்று கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்தது.

எதிர்ப்பு
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர் மற்றும் சிடி ரவிக்குமார் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது. எப்போது இப்படி போராட்டம் செய்து கொண்டே இருக்க முடியாது. லக்கிம்பூரில் நடந்ததை உச்ச நீதிமன்றம் பார்த்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

கலவரம்
அது போன்ற கலவரங்கள், எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் இருக்க போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் இருக்க வேண்டும். போராட்டங்கள்தான் இது போன்ற சம்பவங்களுக்கு வழி வகுக்கிறது என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் தரப்பு வெளியிட்ட உத்தரவில், இது போன்ற கலவரங்கள் நடக்கும் போது அதற்கு யாருமே பொறுப்பு ஏற்பது கிடையாது. பொருட்கள் சேதம் அடைகிறது, மக்கள் பலியாகிறார்கள். ஆனால் யாருமே பொறுப்பு ஏற்பது கிடையாது.

வழக்கு
நீங்கள் ஏற்கனவே ராஜஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளீர்கள். விவசாய சட்டங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளீர்கள். விவசாய சட்டங்களுக்கு எதிராக ஒரு பக்கம் மனுவும் தாக்கல் செய்துவிட்டு இன்னொரு பக்கம் அதை எதிர்த்து போராட்டம் செய்ய அனுமதி கேட்டு வழக்கும் தொடுக்க முடியாது. வழக்கும் தொடுத்துவிட்டு போராட்டமும் செய்ய முடியாது. ஒன்று நீங்கள் நீதிமன்றத்தை நம்ப வேண்டும். இல்லை சாலையில் இறங்கி போராடுவதை நம்ப வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது போராட முடியாது.

ஏன் வழக்கு?
அதோடு நீங்கள் யாரை எதிர்த்து போராடுகிறீர்கள். ஏற்கனவே இந்த சட்டம் இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் சட்டத்திற்கு எதிராக வழக்கு உள்ளது. அடிப்படை விலை குறித்து போராட வேண்டும் என்றால் மாநில அரசுக்கு எதிராக போராட வேண்டும். ஏன் ஜந்தர் மந்தரில் போராட அனுமதி கேட்கிறீர்கள். என்ன கோரிக்கையை வைத்து நீங்கள் போராட போகிறீர்கள். கடந்த முறை டெல்லியில் போக்குவரத்தை நிறுத்தியது போல நீங்கள் நிறுத்த கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தொடர்பு இல்லை
இந்த நிலையில் தங்களுக்கும் டெல்லியில் நடந்த போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கிஷான் மஹாபஞ்சாயத்து அமைப்பு கூறியது. இதையடுத்து நீதிபதிகள், நீங்கள் ராஜஸ்தானில் தொடுத்த விவசாய சட்டத்திற்கு எதிரான மனுவையும் இதோடு நாங்கள் சேர்ந்து விசாரிக்கிறோம். இரண்டையும் ஒன்றாக விசாரிப்போம். வழக்கு நடக்கும் போது போராட அனுமதி உள்ளதா என்று நாங்கள் விசாரணை நடத்துவோம். போராட்ட உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்று விசாரிப்போம் என்று கூறி வழக்கை நீதிபதிகள் அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications