மகிழ்ச்சியா இருக்க இதை பாலோ பண்ணுங்க.. வீடியோவை போட்டு அட்வைஸ் செய்த டெம்ஜெம் இம்னா!
டெல்லி: மகிழ்ச்சியாக இருக்க இதை பாலோ பண்ணுனா போதும் என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் டெம்ஜென் இம்னா அலாங்.
அம்மாநில பாஜகவின் முக்கிய பொறுப்பிலும் இருக்கும் டெம்ஜென் இம்னா அலாங் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.

டெம்ஜென் இம்னா அலாங்
தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவை உணர்வுடன் டெம்ஜென் இம்னா அலாங் பதிவிடும் கருத்துக்கள் நெட்டிசன்கள் மத்தியில் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும். இதன் காரணமாக டெம்ஜென் இம்னா அலாங்கின் ஒவ்வொரு பதிவுகளும் இணையத்தை கலக்கும் வகையில் இருக்கும். வடகிழக்கு மாநில மக்களின் பிரத்யேக முக அமைப்புடன் காணப்படும் டெம்ஜென் இம்னா அலாங்..அதைக் கூட தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் பதிவிட்டது நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்..
இந்த நிலையில், டெம்ஜென் இம்னா தனது ட்விட் பதிவில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். 37 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சாலை ஒன்றின் ஓரத்தில் நிற்கும் இருவர் மைக்கேல் ஜாக்சன் பாப் பாடலுக்கு அவரைப் போல நடன அசைவுகளை வெளிப்படுத்தி டான்ஸ் போடும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்... பிறரின் வார்த்தைகளை மனதிற்கு எடுத்துச்செல்வதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

அலாங்கின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே
அழகான மெசேஜுடன் டெம்ஜென் இம்னா அலாங் பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "அனைவரும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவே விரும்புகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறுகையில், டெம்ஜென் இம்னா அலாங்கின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே" என்று பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சிக்கு பிறரை சார்ந்து இருக்கக்கூடாது
மற்றொரு நெட்டிசன் பதிவிடுகையில், நமது மகிழ்ச்சிக்கு பிறரை சார்ந்தோ எதிர்பார்த்தோ இருக்க்க் கூடாது' என்று பதிவிட்டு இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நாகலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டெம்ஜென் இம்னா பிரேக் டேன்ஸ் ஆடியது இணையத்தில் வேகமாக பரவியது நினைவிருக்கலாம். அதேபோல, வடகிழக்கு மாநில கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் டெம்ஜென் இம்னா பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

சிங்கிளாக இருங்கள்
நாகலாந்து மாநில பாஜக தலைவராக இருக்கும் டெம்ஜென் இம்னாவுக்கு 42 வயதாகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதைக்கூட நகைச்சுவையாக தனது ட்விட் பதிவில் ஒன்று டெம்ஜெம் இம்னா பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த என்னைப் போல சிங்கிளாக இருங்கள் என ஜாலியாக டெம்ஜெம் இம்னா பதிவிட்டது வெகுவாக ரசிக்க வைத்தது.

புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க
முன்னதாக தனது கண்கள் சிறியதாக இருப்பதால் அதில் ஏராளமான பயன்கள் இருப்பதாக டெம்ஜெம் இம்னா கூறிய கருத்து நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியிருந்தது. தனது பதிவில், ''எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கக் கூடும்.. ஆனால், எத்தனை கி.மீட்டர் தொலைவில் இருந்தாலும் கேமராவை நான் பார்த்து விடுவேன்.. புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க எப்போதும் தயார்.. இதை படிக்கும் போது நீங்கள் சிரிப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது" என்று பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications