பாஜகவின் சிம்ம சொப்பனம்.. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ்! மபி-யில் இன்று இறுதிச்சடங்கு
டெல்லி: மறைந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவின் இறுதிச் சடங்கு மத்திய பிரதேசத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்து வந்த சரத் யாதவின் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சரத் யாதவ் (வயது 75) அம்மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத நபராக திகழ்ந்து வந்தார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவராக இவர் பதவி வகித்து வந்தார்.
ஜெய பிரகாஷ் நாராயணின் கொள்கைகளை ஏற்று அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த சரத் யாதவ், பாஜகவை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்து வந்த கருத்துக்கள் இன்னும் காட்டமாக இருந்தன.

உடல்நலக் குறைவு
இந்த நிலையில் டெல்லியில் தங்கி இருந்த சரத் யாதவுக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த சரத் யாதவ், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிர் பிரிந்தது
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் டெல்லி சத்தர்பூரில் இருக்கும் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, லாலு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று இறுதிச் சடங்கு
இந்த நிலையில் சரத் யாதவின் இறுதிச் சடங்கு இன்று மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அவரது உடல் விமானம் மூலமாக மத்திய பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அரசியல் பயணம்
ஜெயபிரகாஷ் நாராயணனின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த அவர் மாணவர் இயக்க தலைவராக தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கினார். 1974 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்பியான அவர், இதுவரை 7 முறை லோக் சபா உறுப்பினராகவும், 3 முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

மத்திய அமைச்சர்
இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணனனால் முதல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் சரத் யாதவ். ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதீஷ் குமார் ஆகியோரோடு இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தொடங்கிய சரத் யாதவ், வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.

தீவிர பாஜக எதிர்ப்பாளர்
மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வந்த சரத் யாதவ், பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணி அமைத்ததை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி 2018 ஆம் ஆண்டில் லோக் தாந்திரிக் ஜனதா தளம் என்று கட்சியை தொடங்கினார். பாஜகவை ஓரணியில் எதிர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தன்னுடைய கட்சியை இணைத்தவர் சரத் யாதவ்.












Click it and Unblock the Notifications