இந்தியாவில் பரவும் டெல்டா கொரோனா.. காதுகேளாமை, குடலிறக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தும்.. விரிவான தகவல்
டெல்லி: தற்போது வரை உலகில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளிலேயே இந்தியாவில் அதிவேகமாகப் பரவும் டெல்டா வகை கொரோனா தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
உலகில் தற்போது பல உருமாறிய கொரோனா வகைகள் பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா வகைகளில் சில வகைகள் ஒர்ஜினல் கொரோனாவை விட வேகமாகப் பரவுவதாகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை மிக மோசமான நிலைக்குச் செல்ல இதுவே காரணமாகக் கருதப்படுகிறது.

பல புதிய பாதிப்புகள்
இந்நிலையில், B.1.617.2 டெல்டா வகை கொரோனா குறித்துக் கூடுதல் தகவல்களை மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்குக் காதுகேளாமை, கடுமையான இரைப்பைக் கோளாறுகள், ரத்த உறைதல் பிரச்சினைகளும் ஏற்படுவதாக மருத்துவர்களால் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வகை தீவிரமான பாதிப்பை அதிகப்படுத்துவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கூடுதல் ஆய்வு தேவை
இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த கொரோனா குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொண்டோம். ஆனால், அதற்குள் இந்த வகை கொரோனா தன்னை உருமாற்றிக் கொண்டது. கொரோனா வைரசை கணிக்க முடியவில்லை. டெல்டா வகை கொரோனா மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுகிறது. இருப்பினும், இது குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளக் கூடுதல் ஆய்வுகள் தேவை" என்றார்.

கொரோனா நோயாளிகளுக்குக் குடலிறக்கம்
கொரோனா 2ஆம் அலையில் நோயாளிகளுக்கு வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, காதுகேளாமை மற்றும் மூட்டு வலி ஆகியவை அதிகம் ஏற்படுகிறது, இன்னும் சில நோயாளிகள் ரத்த உறைதல் பிரச்சினைகளும் ஏற்படுவதாகவும் , இதனால் திசுக்கள் பாதிக்கப்பட்டு குடலிறக்கம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு கொரோனா நோயாளிகள் மத்தியில் மேற்கூறிய பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

ரத்த உறைதல் பிரச்சினை
குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்த உறைதல் பிரச்சினை, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாகவே உள்ளது. அதாவது இதற்கு முன்பு வரை ரத்த உறைதல் பிரச்சினையே இல்லாத நோயாளிகளுக்கும்கூட இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா வகை கொரோனாவ்ல இந்த பாதிப்பு ஏற்படுமோ என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். குறிப்பாகக் குடலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால், வயிற்று வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.

கருப்பு பூஞ்சை பாதிப்பு
டெல்டா வகை கொரோனா தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டன. இந்த வகை கொரோனா உடலில் இருக்கும் ஆன்டிபாடிகளை முற்றிலுமாக அழித்துவிடுகிறது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைவார்களுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்படுகிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சுமார் 8,800 ஆயிரம் பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சிறார்களுக்கு மத்தியில் கொரோனா
இதுமட்டுமின்றி குழந்தைகள் மத்தியிலான பாதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள்
மேலும், டெல்டா வகை கொரோனா தடுப்பூசிகளிலிருந்தும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிதாக உருவாக்கப்படும் தடுப்பூசிகள் அதை மனதில் வைத்துக் கொண்டே உருவாக்கப்படுகிறது. ஒரு வைரஸ் எப்படிச் செயல்படும் என்பதை நம்மால் உறுதியாகக் கண்டறிய முடியாது என்றாலும் தேவையான நடவடிக்கை எடுத்தால் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications