காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சில நிமிடங்கள் தான்.. குலாம் நபி ஆசாத்தை வரவேற்கும் பாஜக!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள குலாம் நபி ஆசாத் பாஜகவுக்கு வரவேற்கப்படுகிறார் என்று பாஜக முக்கியத் தலைவர் குல்தீப் பிஷ்னாய் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜி23 குழுவின் முக்கிய நபராகவும் கருதப்பட்ட குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குலாம் நபி ஆசாத் வெளியிட்ட கடிதத்தில், ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மைதான் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் என அடுத்தடுத்து விலகி வருகின்றனர். குறிப்பாக மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார், அக்கட்சியிலிருந்து பிப்ரவரி மாதம் விலகினார். பின்னர், மூத்த தலைவரும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான கபில் சிபல் விலகுவதாக அறிவித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்கில் சில நாட்களுக்கு முன் கட்சியிலிருந்து விலகினார்.
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் குலாம் நபி ஆசாத் திடீரென விலகல் முடிவை எடுத்திருப்பது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள கடிதத்தில், 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின், சோனியா காந்தி இடைக்கால தலைவராக வந்தார்.
முன்பு காங்கிரஸ் ஆளும்போது இருந்த ரிமோட் கண்ட்ரோல் மோட் மீண்டும் கட்சிக்குள் அமலுக்கு வந்துள்ளது. சோனியா பெயருக்கு தலைவராக இருந்தாலும் எல்லா முடிவுகளும் ராகுல் காந்தி மூலமே எடுக்கப்பட்டு வந்தது. சமயங்கள் ராகுல் காந்தியின் பாதுகாவலர், பிஏ உள்ளிட்டோர் கூட முடிவுகளை எடுத்தனர் என்று ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜகவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் குல்தீப் பிஷ்னாய், காங்கிரஸ் கட்சி அழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ராகுல் காந்தி தனது ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும். இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள குலாம் நபி ஆசாத், பாஜகவுக்கு வரவேற்கப்படுகிறார். கட்சி என்னிடம் குலாம் நபி ஆசாத் குறித்து கேட்டால், அவரை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குல்தீப் பிஷ்னாய், அண்மையில் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications