எப்ஸ்டீன் சர்ச்சையில் சிக்கியவருக்கு வாய்ப்பு தரும் பாஜக.. எல்.முருகன் இடத்தில் ஹர்தீப் சிங் போட்டி
டெல்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் தனது வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ஹர்தீப் சிங் பூரியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அவர் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தில் ஹர்தீப் சிங் பூரி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் காலியாகும் ராஜ்யசபா இடத்துக்கான இடைத்தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த எல். முருகன் தனது அமைச்சர் பதவியையும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த இடம் காலியானது.

ஹர்தீப் சிங் பூரி
இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு தான் ஹர்தீப் சிங் பூரியை தனது வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ஹர்தீப் சிங் பூரியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அவரது பெயர் எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தில் சிக்கியது. இதனால் ஹர்தீப் சிங் பூரி அமைச்சர் பதவியை இழக்கக்கூடும் என சொல்லப்பட்ட நிலையில், அவர் இப்போது மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச பாஜக ஐந்து பேரின் பெயர்களை டெல்லி தலைமைக்கு பரிந்துரைத்திருந்தது. இதில் ஹர்தீப் சிங் பூரியின் பெயரும் இடம் பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தான் தற்போது அவரையே வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
யார் இந்த ஹர்தீப் சிங் பூரி?
இந்திய வெளியுறவு பணியில் அதாவது IFSல் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹர்தீப் சிங் பூரி, 2009 முதல் 2013 வரை ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். 2017ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். எம். வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் அமைச்சர் பதவியை ஏற்றார்.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளர் குர்ஜீத் சிங் அவுஜ்லாவிடம் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன் பின்னர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மத்திய அமைச்சராகவும், 2021ஆம் ஆண்டு முதல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இப்போது பெட்ரோலிய துறை உடன் சேர்த்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையையும் அவர் கவனித்து வருகிறார்.
பதவி முடிகிறது
ஹர்தீப் சிங் பூரி கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தர பிரதேசத்தில் இருந்து முதன்முறையாக ராஜ்யசபா உறுப்பினரானார். அப்போது கோவாவின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில் இருந்து அவர் வகித்து வரும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எப்ஸ்டீன் சர்ச்சை
அன்மையில் உபி-க்கான ராஜ்யசபா தேர்தலில் பாஜக அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. இதற்கிடையே எப்ஸ்டீன் விவகாரத்திலும் அவரது போட்டோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியை இழக்கலாம் என தகவல் வெளியானது. இருப்பினும், அவருக்கு மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜக வாய்ப்பளித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா இடங்கள் உள்ள நிலையில், காலியாக உள்ள ஒரு இடத்துக்கான இந்த தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.




Click it and Unblock the Notifications
