"ஒரே கல்லில் 2 மாங்காய்.." குறைவாக வரி கட்டினால் போதும்.. கூடவே நல்லா சேமிக்கவும் செய்யலாம்! எப்படி?
டெல்லி: நீங்கள் முதலீடு செய்தால் அதில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அந்த முதலீடு முதிர்ச்சி அடையும் போது அதிலும் வரி பிடித்தம் செய்யப்படும்.. அட என்னப்பா எல்லா இடங்களிலும் வரி கட்ட வேண்டுமா எனத் தோன்றுகிறதா.. ஆனால், வரியை குறைத்துவிட்டு அதே நேரத்தில் நல்ல முதலீடும் செய்ய சில ஆப்ஷன்கள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மாத சம்பளம் வாங்கும் பெரும்பாலான நபர்கள் வரிக்கே கணிசமான தொகையைச் செலுத்த வேண்டும். அதையும் தாண்டி முதலீடு செய்தால் அதில் வரும் லாபம், அது முதிர்வடையும் போதும் நாம் வரி செலுத்த வேண்டி இருக்கும்.

மிடில் கிளாஸ்: இதனால் மிடில் கிளாஸ் மக்கள் செல்வத்தை உருவாக்குவது என்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செய்தால் இந்த இரண்டையும் ஒரே கல்லில் நாம் முடித்துவிடலாம். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இது வருமான வரி பற்றியது மட்டும் இல்லை. அதையும் தாண்டி நீங்கள் எந்தளவுக்கு வரியைச் சேமிக்க முடியும் என்பதை விளக்குவதாகும்.
முதலில் சரியான tax-efficient instrumentsகளில் முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக ELSS எனப்படும் ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
முக்கியமான வழி: இந்தியாவைப் பொறுத்தவரை வரி சேமிப்பு என்றாலே பலரும் சொல்வது இந்த பிபிஎப் மற்றும் இபிஎப் தான். இது இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவில் EEE வரம்பிற்குள் வரும்.. EEE என்றால் என்ன எனக் கேட்கிறீர்களா.. EEE என்றால் exempt-exempt-exempt என்று அர்த்தம். அதாவது முதலீட்டிற்கும் வரி இல்லை. இதில் கிடைக்கும் வட்டி அல்லது லாபத்திற்கும் வரி இல்லை. அதேபோல முதிர்ச்சி அடையும் போதும் வரி இல்லை. இப்படி ஒரு பைசா கூட வரி செலுத்தத் தேவையில்லை என்பதாலேயே மக்கள் இதை விரும்புகிறார்கள்.
PPFஇல் செய்யப்படும் முதலீடு, பிரிவு 80C இன் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானத்திலிருந்து இந்த பிபிஎஃப் முதலீட்டைக் கழித்துக் கொள்ளலாம். மேலும், இந்த முதலீட்டில் கிடைக்கும் வட்டிக்கும் வரி இல்லை. மேலும், முதலீட்டுக் காலத்திற்குப் பிறகு பெறப்பட்ட முதிர்வுத் தொகைக்கும் முழுமையும் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மூன்று காரணங்கள்: இதைத் தேர்வு செய்ய வேறு மூன்று முக்கிய காரணங்களும் இருக்கிறது. முதலில் இது பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. அரசு சார்ந்த முதலீடு என்பதால் இது நிலையானதாக இருக்கிறது. அடுத்து இது ஒரு நீண்ட கால முதலீடு என்பதால் நமக்கு முதிர்வின் போது கிடைக்கும் தொகையும் அதிகமாக இருக்கும். மூன்றாவது முக்கிய காரணம்.. ஐந்தாவது ஆண்டிற்குப் பிறகு.. குறிப்பிட்ட காரணங்களுக்காக நீங்கள் பணத்தை எடுக்கலாம்.
அதேபோல என்சிபிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பில் முதலீடு செய்தாலும் அதுவும் 80சி கீழ் தகுதி பெறும். இதிலும் பிபிஎப் போலவே சில குறிப்பிட்ட காரணங்களுக்குப் பணத்தை முன்கூட்டியே எடுக்கும் ஆப்ஷனும் இருக்கிறது.
இன்சூரன்ஸ்: அடுத்து லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு செலுத்தப்படும் ப்ரீமியம்களுக்கும் 80C, 80D கீழ் வரி விலக்குகள் கிடைக்கும். வரி விலக்கு ஓகே சேமிப்பு என்றீர்களே அது எங்கே என நீங்கள் கேட்கலாம்.. இது நமக்கு நேரடி சேமிப்பைத் தராது என்ற போதிலும் மறைமுக சேமிப்பைத் தரும். அதாவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் செலவுகளில் இருந்து ஹெல்த் இன்சூரன்ஸ்கள் காக்கும். லைஃப் இன்சூரன்ஸ் எடுத்தவர்கள் எதிர்பாராத மரணம் ஏற்படும் சூழல்களில் இந்த லைப் இன்சூரன்ஸ் குடும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்.
பெண் குழந்தை: அடுத்து உங்களுக்குப் பெண் குழந்தைகள் இருக்கிறது என்றால் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்.. அதாவது செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெரியளவில் உதவியாக இருக்கும். வீட்டில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் இருந்தால்.. இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவீர்கள். ரூ.250 முதல் ரூ. 1.5 லட்சம் வரை ஆண்டுக்கு முதலீடு செய்யலாம். பெண் குழந்தை வளர்ந்து 18 வயதான பிறகு திருமணத்திற்கு இந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.இதுவும் 80சி கீழ் வருகிறது.
அதேபோல வரி இல்லாத கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இதை ஆங்கிலத்தில் tax-free bonds என்பார்கள். இந்த கடன் பத்திரங்கள் மூலம் நமக்கு நிலையான வருமானம் கிடைக்கும். மேலும் 1961 வருமான வரிச் சட்டத்தின் கீழ் இதில் இருந்து வரும் வருமானம் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பத்திரங்கள் பொதுவாக 10-20 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டிருக்கும். வட்டியும் சற்று குறைவாகவே இருக்கும். இதுபோல வரியைக் குறைவாகச் செலுத்திவிட்டு அதே நேரத்தில் செல்வத்தைச் சேமிக்கப் பல வழிகள் உள்ளன. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications