1999 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல்.. இந்தியாவுக்கு உதவ உலக நாடுகள் மறுத்ததன் காரணமே 'பொக்ரான்'?
டெல்லி: நெட்ப்ளிக்ஸ் (நெட்ப்ளிக்) ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் IC 814 கந்தஹார் என்கிற 1999-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான வெப் சீரிஸ் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. அதுவும் வெப்சீரிஸ் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பிய பின்னரே பலரது பார்வையும் கருத்துகளும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
அது என்ன இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல்? ஒரு டைம்லைன் பார்ப்போம்.

1999-ம் ஆண்டு டிசம்பர் 24
மாலை 4.53: நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி நோக்கிப் 190 பேருடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814 நடுவானில் 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாலை 4.56: டெல்லியில் உள்ள வான் கட்டுப்பாட்டு மையத்துக்கு விமானம் கடத்தப்பட்ட தகவல் கிடைக்கிறது
இரவு 7 மணி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 190 பயணிகளுடன் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814 தரை இறங்கியது. ஆனால் சிறிது நேரத்திலேயே எரிபொருள் நிரப்பாமலேயே விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
இரவு 8.07 மணி: பாகிஸ்தானின் லாகூரில் விமானத்தை பயங்கரவாதிகள் தரை இறக்க முயன்றனர். முதலில் இதற்கு மறுத்த பாகிஸ்தான் பின்னர் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்தது.
இரவு 10.32 மணி: தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நோக்கி விமானம் புறப்பட்டுச் சென்றது. ஆனால் காபூர் விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானம் தரை இறங்க இயலாது என்பதால் துபாய்க்கு திருப்பிவிடப்பட்டது
1999-ம் ஆண்டு டிசம்பர் 25
அதிகாலை 1.32 மணி: இந்தியாவின் 190 பயணிகளுடன் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியது. துபாய் அரசு கேட்டுக் கொண்டதால் பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ரூபின் கத்யால் என்ற 25 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் விமானத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
காலை 6.20 மணி: துபாயில் இருந்து கடத்தப்பட்ட விமானம் புறப்பட்டது.
காலை 8.33 மணி: மீண்டும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தரையிறக்கப்பட்டது.
1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை கந்தஹாரில்தான் விமானம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தது
டிசம்பர் 31: பயங்கரவாதி மசூத் அசார் உள்ளிட்டோர் மத்திய அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கால் பயங்கரவாதிகளிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து எஞ்சியிருந்த பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை விடுவித்தனர் பயங்கரவாதிகள். 2 சிறப்பு விமானங்கள் மூலம் பயணிகள் டெல்லிக்கு அழைத்துவரப்பட்ட போது
புத்தாயிரமாண்டு.. கி.பி. 2000-ம் ஆண்டு பிறந்திருந்தது.. அப்போது நேரம் 12.22 AM
பொக்ரான் காரணமா?: இந்திய பயணிகள் 190 பேருடன் இந்தியாவின் விமானம் கடத்தப்பட்ட போது, பாகிஸ்தானில் முசாரப் தலைமையில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. கார்கில் போரில் பெரும் தோல்வியைப் பெற்ற முசாரப் இந்தியாவுக்கு உதவக் கூடிய நிலையில் இல்லை. இருந்தாலும் இந்தியாவின் தொடர் வேண்டுகோளால்தான் லாகூரில் எரிபொருள் நிரப்ப மட்டும் அனுமதித்தது.
தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு இந்திய பயணிகள் விமானம் கொண்டு செல்லப்பட்ட காலத்தில் உலகை அச்சுறுத்திய பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கோலோச்சிய காலம். தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளால் எந்த ஒரு நாடும் அங்கீகாரம் தராத எதிர்த்த காலம். அப்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிடம் இந்தியா உதவி கோரியது.
ஆனால் 1998-ம் ஆண்டுதான் ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா அடுத்தடுத்து அணு ஆயுத சோதனை நடத்தி பெருமிதப்பட்டது. இந்தியாவின் இந்த அணு ஆயுத சோதனைக்கு உலகமே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதைய அமெரிக்கா அதிபர் பில் கிளிண்டன், இந்தியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்திருந்தார். இதனால் உலகத்தின் நட்புறவில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதனையே காரணமாக காட்டி இந்திய அரசு தரப்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் உதவிக் கரம் நீட்டப்பட்ட போதும் எந்த ஒரு நாடுமே உதவ முன்வரவில்லை. அதாவது வாஜ்பாய்/ பாஜக ஆட்சிக் கால பெருமிதமாக பேசப்பட்ட/ பேசப்படும் பொக்ரான் அணு ஆயுத சோதனையால் நமக்கு என்ன நன்மைதான் நடந்தது என்பதைத்தான் இந்த சம்பவம் வெளிப்படுத்தி இருக்கிறது. அன்று காட்டுமிராண்டித்தனமான நடந்து கொண்டதாக உலகம் சொன்ன தலிபான்களின் கருணையால் அல்லது தலிபான்களின் பண வேட்கையால்தான் இந்திய உயிர்கள் பிழைத்தன என்பது சரித்திரம். இதனைத்தான் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியின் IC814 கந்தஹார் வெப்சீர்ஸ் விவரிக்கிறது.
வெப் சீரிஸ் விமர்சனம்:
முதல் பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 1
2-வது பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 2
3-வது பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 3












Click it and Unblock the Notifications