வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 3
முதல் பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 1
இறுதிப் பகுதி
சரி, கந்தஹாருக்கு கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். பேச்சுவார்த்தையை உடனே நடத்துவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் அல்லவா? அப்போதும் கூட 'கூட்டணி கட்சிகள்' என்ன சொல்லுமோ என்கிற அச்சத்தில் எந்த முடிவும் எடுக்காமல் 'அதிகாரிகள்' முடிவெடுக்கட்டும் நிலையில் பந்தை தள்ளிவிட்டவர் பிரதமராக இருந்த வாஜ்பாய். கந்தஹாரில் பயணிகள் விமானம் நின்றிருக்க, அப்போது வாஜ்பாய் அளித்த பேட்டியையும் அச்சுபிசகாமல் இந்த வெப்சீரிஸ் பதிவு செய்திருக்கிறது.
மேலும் பொக்ரான் அணுகுண்டு சோதனையை இன்றைக்கும் பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் கந்தஹாருக்கு பயணிகள் விமானம் கடத்தப்பட்ட போது அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச நாடும் இந்தியாவுக்கு உதவ முன்வரவில்லை. இதற்கு காரணமே பொக்ரான் அணுகுண்டு சோதனையால் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு எதிராக நின்றதுதான். இதனையும் இந்த வெப்சீரிஸ் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

பயணிகள் பிணைக்கைதிகளாக பேச்சுவார்த்தை நடத்துகிற போது, தலிபான்கள் உதவியுடன் தாக்குதல் நடவடிக்கை தொடர்பாகவும் ரா, ஐபி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதற்கு வாய்ப்பிருந்தும் கூட பேச்சுவார்த்தை அதிகாரிகள் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என பேசுகிற பாணி பார்க்கிற நம்மை பதைபதைக்க வைக்கிறது.. ஆனால் கந்தஹார் விமான நிலையத்தில் டெல்லி விமான நிலையத்தில் அந்த ஒரு வார காலமும் பசியும் பட்டினியுமாக பரிதவித்த அந்த பிணைக் கைதிகளின் உறவினர்களின் மனநிலை அன்று என்னவாக இருந்திருக்கும் என்பதுதான் முக்கியமானது.
மேலும் தலிபான்கள் உதவியை இந்திய உளவுத்துறை அதிகாரி (அரவிந்த்சாமி) கேட்கும் போது கை மாறாக தலிபான்கள் நிர்வாகத்துக்கு இந்திய அரசு செய்யக் கூடிய உதவிகளையும் பட்டியலிடுகிறார். அப்படியானால் அன்றைய வாஜ்பாய் அரசு, தலிபான்களை அங்கீகரிக்கவும் தயாராக இருந்ததா? என்கிற கேள்வி ஒரு இடத்தில் மட்டுமல்ல.. இன்னொரு இடத்தில், பயணிகள் விடுதலைக்குப் பின்னர் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர், தங்களை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிற இடத்திலும் எழுவது தவிர்க்க முடியாததாகவே இருந்தது.
அத்துடன் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை விடுதலை செய்வது, ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து 2 தீவிரவாதிகளை விடுதலை செய்ய மறுத்த அப்போதைய அம்மாநில முதல்வர் திடீரென கையெழுத்திட்டது, பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் போது நிகழ்ந்தது என்ன, பயங்கரவாதிகள் கேட்ட 200 மில்லியன் டாலர் பணம் கைமாறியதா?, ஒரு வாரம் இந்திய விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி பயணிகளுக்கு உணவு வழங்கிய அன்றைய தலிபான்களுக்கு அன்றைய வாஜ்பாய் அரசு என்ன தொகை செலுத்தியது என்பது உள்ளிட்ட விடைதெரியாத கேள்விகள் நீடித்து கொண்டே இருப்பதையும் இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது புரிந்து கொள்ளவும் முடிகிறது.
இப்படி அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசின் 'நிஜ'முகத்தை வெட்டவெளிச்சமாக அம்பலப்படுத்தினால் இன்றைய பாஜக கூட்டணி அரசுக்கு வலிக்கத்தானே செய்யும்! அதனால்தான் சம்மன் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகவே நமக்கும் புரிகிறது.. நாட்டு மக்களுக்கும் புரிந்தால் மகிழ்வுதான்! (நிறைவு)












Click it and Unblock the Notifications